மூன்று தசாப்த கால கொடூரமான யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜெனீவா ஊடாகத் தீர்வுகளை வழங்குவதில் எந்தப் பயனும் இல்லை எனவும், எமது நாட்டுப் பிரச்சினைகளை எமது நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, யுத்த வெற்றிக்கு அரசியல் ரீதியாக தலைமைத்துவத்தைப் பெற்றுத் தந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இராணுவத் தளபதியாகத் தலைமை தாங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உட்பட முப்படைகளின் வீரர்கள், காவல்துறையினர் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையினருக்கும் தனது விசேட மரியாதையைச் செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.
"யுத்தத்தினால் நானும் எனது தந்தையை இழந்தவன் என்பதால், பாதிக்கப்பட்டவர்களின் வேதனை எனக்கு நன்றாகவே புரியும். எனவே, 'இராணுவ வீரர்கள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்த நாங்கள் தயங்கக் கூடாது. அத்துடன், மீண்டும் ஒரு யுத்தம் நாட்டில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அவதானமாக இருக்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
யுத்தத்தினால் பல்வேறு இனப் பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மீளக்கட்டியெழுப்புதல், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கச் சூழலை உருவாக்குவதன் மூலமே அவர்களுக்கான பிரச்சினைகளை நாட்டுக்குள்ளேயே தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், வருடாந்தம் ஜெனீவாவுக்குச் சென்று பேசுவதை நிறுத்தி, நாட்டின் ஒருமைப்பாடு, ஆட்புல எல்லை, இறைமை மற்றும் அரசியல் சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற யோசனையையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்துள்ளார்.
