Our Feeds


Wednesday, May 20, 2026

Sri Lanka

விட்ஸ் கார் கனவை நனவாக்குங்கள் - அரசாங்கத்திற்கு சஜித் சவால்!


அரச வருவாய் அதிகரித்து திறைசேரி நிரம்பி வழிகிறது என்றால், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும், தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தபடி 12 இலட்சம் ரூபாவிற்கு ‘விட்ஸ்’ (Vitz) ரக காரை வாங்கும் மக்களின் கனவை நனவாக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்குச் சவால் விடுத்துள்ளார்.

நேற்று (19) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறான கேள்விகளை அரசாங்கத்தை நோக்கிக் எழுப்பினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டதாவது:

ஜனாதிபதியும் ஆளுந்தரப்பு அமைச்சர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டில் முதன்மை உபரி காணப்படுவதாகவும், அரச வருவாய் அதிகரித்து திறைசேரி நிரம்பி வழிவதாகவும் தெரிவித்து வருகின்றனர். அத்துடன், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெரும் தொகை நிதியுதவிகள் கிடைக்கவுள்ளதாகவும் அரசாங்கத் தரப்பிலிருந்து கூறப்படுகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில், மீண்டும் எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிடும் என ஜனாதிபதி குறிப்பிடுவது ஏன்? திறைசேரி நிரம்பி வழியும் பட்சத்தில், அந்த நிதியைப் பயன்படுத்தி எரிபொருள் விலை அதிகரிப்பைத் தடுத்து, மக்களுக்கு ஏன் நிவாரணம் வழங்க முடியாது என அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த தேர்தல் காலங்களில், 12 இலட்சம் ரூபாவுக்கு ‘விட்ஸ்’ ரக கார் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம் என தற்போதைய ஆளுந்தரப்பினர் வாக்குறுதி அளித்திருந்தனர். இத்தகைய சூழலில், நடுத்தர மக்கள் வாகனமொன்றை வாங்குவதற்குக் கொண்டுள்ள கனவை அரசாங்கம் எப்போது நனவாக்கப் போகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வினவினார்.

ஒரு நபர் மாதமொன்றுக்கு 16,690 ரூபாவைக் கொண்டு வாழ முடியும் என அரசாங்கம் தெரிவிப்பதைக் கடுமையாக விமர்சித்த சஜித் பிரேமதாச, தற்போதைய வாழ்க்கைச் செலவுடன் இந்தத் தொகையை வைத்துக் கொண்டு ஒருவரால் எவ்வாறு வாழ முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த வறுமைக் கோட்டைக் கணக்கிட்டுள்ள விதம் முற்றிலும் தவறானதாகும். எனவே, அத்திணைக்கள அதிகாரிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து, இத்தரவுகள் மற்றும் தகவல்களை எவ்வாறு பகுப்பாய்வு செய்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் வலியுறுத்தினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »