Our Feeds


Friday, May 22, 2026

Sri Lanka

எல்லா இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான சூழலை உருவாக்குவோம் - நிந்தவூரில் ஜனாதிபதி!


சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் என எல்லா இன மக்களும் ஒன்றாகவும், ஒற்றுமையாகவும் வாழ்வதற்கான சூழலை உருவாக்கும் வேலைகளையே நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (22) நிந்தவூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோது தெரிவித்தார்.

1997ஆம் ஆண்டு காலப் பகுதியில் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்பினால் அடிக்கல் நடப்பட்ட நிந்தவூர் கலாசார மண்டபத்தின் (அஸ்ரப் ஞாபகார்த்த மண்டபம்) அபிவிருத்திப் பணிகள் நீண்ட காலமாக கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டன.

இந்நிலையில் இந்த மண்டபத்தின் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்காக 2026 வரவு - செலவு திட்டத்தில் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக நிந்தவூர் அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி அநுர குமார  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சகல இன மக்களும் ஒன்றிணைந்து இந்த அரசாங்கத்தினை உருவாக்கினார்கள்.  பல்வேறு காரணங்களுக்காக எங்களுக்கு வாக்களித்தீர்கள். கடந்த காலங்களில் மக்களின் வாக்குகளைப் பெற்று அரசாங்கத்தை அமைத்தவர்கள் மக்களின் மனங்களில் இனவாதத்தை விதைத்தார்கள். 

அந்த இனவாத அரசாங்கத்தை தோற்கடித்ததன் மூலமாக எங்களுடைய அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். ஆதலால் தேசிய ஐக்கியத்தை உருவாக்குகின்ற வகையில் மக்களின் வரம் எமக்கு கிடைத்துள்ளது. அதனால் நாங்கள் ஒருபோதும் இனவாத அரசியலுக்கு இடமளிக்கப் போவதில்லை.

சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் என எல்லா இன மக்களும் ஒன்றாகவும் ஒற்றுமையாகவும் வாழும் சூழலை உருவாக்கும் வேலைகளையே நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்.

கடந்த காலங்களில் மக்கள் பல்வேறு அம்சங்களில் முரண்பாடுகளுடன் வாழ்ந்தார்கள். ஆனால் எங்களுடைய அரசாங்கம் உருவாக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்துள்ளபோதிலும் மக்கள் அச்சமின்றி முரண்பாடுகள் தோன்றா வண்ணம் வாழ்கிறார்கள். இனவாத குழப்பம் இல்லாமல்  சுதந்திரமாக எல்லா இன மக்களும் தங்களின் செயற்பாடுகளை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருக்கிறோம்.

மக்களை இனவாதத்திற்குள் தள்ளி அச்சத்துடனும் முரண்பாடுகளுடனும் வாழச் செய்த அரசியல் முடிந்துவிட்டது. நாட்டில் இலஞ்சம், ஊழல் போன்றவற்றை ஒழிப்பதற்காகவும் நீங்கள் எங்களுக்கு வாக்களித்தீர்கள். அவற்றை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளையும் செய்து கொண்டிருக்கிறோம்.அரசியல் பகுப்பாய்வு

அரசியல் கொள்ளை மற்றும் களவுகளை நிறுத்தி இருக்கிறோம். இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் ஒன்றுமே கூற முடியாத நிலையில் பல்வேறு பொய்களைக் கூறுகின்றனர். நான் இன்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். நானோ எனது அமைச்சர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ ஒரு சதமேனும் களவெடுக்க மாட்டோம். அவ்வாறானதொரு அரசாங்கமே உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சட்ட அமுலாக்கத்தில் பாரபட்சம் காட்டப்பட்டது. அதிகாரம் இருந்தால், செல்வம் இருந்தால் அத்தகையவர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது. ஏழைகளுக்கும், அதிகாரம் இல்லாதவர்களுக்கும் சட்டம் பாய்ந்தது. அப்படித்தான் நமது நாடு இருந்தது.

இன்று நாம் நாட்டை கட்டியெழுப்புகிறோம். சட்டம் அனைவருக்கும் சமமானது. பாரபட்சமற்ற நீதி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. சட்டத்தை பலப்படுத்துகிறோம். பாரபட்சமற்ற முறையில் நியாயம் செய்கிறோம்.

நாங்கள் முன்னாள் ஜனாதிபதிகளை இலஞ்ச ஆணைக்குழுவின் முன்னால் கொண்டு வந்துள்ளோம். நீண்ட காலமாக கைவிடப்பட்ட இந்த மண்டபத்தின் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக நாங்கள் 300 மில்லியன் ரூபா நிதியை முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்துள்ளோம்.

இதனை பூரணப்படுத்துவதற்காக மொத்தமாக எவ்வளவு நிதி தேவை என்று மதிப்பீடு செய்யுங்கள். அதற்கான முழு நிதியையும் அடுத்த வரவு - செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்வோம் என்றார். 

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் வஸந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் ஆதம்பாவா, எம்.ஏ.எம்.தாஹிர், எம்.எஸ்.உதுமாலெப்பை உட்பட மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »