இன்று (07) நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரென் ஆகிய உணவு வகைகளின் விலைகளை 25 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தி நடத்தப்படும் சிற்றுண்டிச்சாலைகளில் சாதாரண தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இது குறித்துத் தெரிவிக்கையில்,
சுமார் 25% - 30% வரையான சிற்றுண்டிச்சாலைகள் லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்துவதாகவும், தற்போதுள்ள நிலையில் அவர்களால் அந்த எரிவாயுவின் விலையைத் தாங்கிக்கொள்ள முடியாதுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கமைய, லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தும் சிற்றுண்டிச்சாலைகளில் ஒரு சாதாரண தேநீரின் விலை 5 ரூபாவினாலும், பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிற்றுண்டி வகைகளின் விலைகள் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், முட்டை ரொட்டி மற்றும் பராட்டாக்களின் விலைகளில் மாற்றம் இல்லை என ஹர்ஷன ருக்ஷான் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
