Our Feeds


Thursday, May 7, 2026

Zameera

சர்வதேச ரீதியில் இலங்கை பாரிய இராஜதந்திர நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் - டிலான் பெரேரா

இலங்கை அரசாங்கத்தின் தன்னிச்சையான தீர்மானங்கள் மற்றும் முறைகேடான டெண்டர் நடைமுறைகள் காரணமாக, சர்வதேச ரீதியில் இலங்கை பாரிய இராஜதந்திர நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், பாராளுமன்றத்தில் சபாநாயகரின் செயல்பாடுகள் தற்போது நடுநிலையாக இல்லை எனவும், குறிப்பாக மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் மற்றும் நிதி முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளைத் திசைதிருப்ப சபாநாயகர் முயற்சிப்பதாகவும் கடுமையாகச் சாடினார்.

நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் இழைக்கும் தவறுகளுக்கு அரசாங்கம் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இது தொடர்பான முறையான விசாரணைகள் நிறைவடையும் வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது பதவிகளிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் தற்போது நிலவும் கடவுச்சீட்டு தட்டுப்பாட்டிற்கு அரசாங்கத்தின் முறைகேடான டெண்டர் நடைமுறைகளே நேரடி காரணம் எனச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, ஈ-கடவுச்சீட்டு (e-passport) அச்சிடுவதற்காக விண்ணப்பித்திருந்த தகுதியான போலந்து நாட்டு நிறுவனம் உள்ளிட்ட ஆறு சர்வதேச நிறுவனங்களை எவ்வித நியாயமான காரணமுமின்றி நிராகரித்துவிட்டு, அரசாங்கத்திற்கு நெருக்கமான ஒருவருக்கு இந்த ஒப்பந்தத்தை வழங்க முயற்சிப்பதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினார். 

இந்த டெண்டர் நடைமுறையில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதி, போலந்து அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் உத்தியோகபூர்வமாகப் புகாரளிக்கத் தயாராகி வருவதாகவும் டிலான் பெரேரா இதன்போது வெளிப்படுத்தினார்.

போலந்து போன்ற ஒரு நட்பு நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் இலங்கைக்கு எதிராகப் புகார் அளித்தால், அது நமது நாட்டின் சர்வதேச நற்பெயரைக் கடுமையாகப் பாதிப்பதுடன், இலங்கை உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் நிலையை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்தார். 

எனவே, அரசாங்கம் உடனடியாக இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும், நாட்டு மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதைத் தடுத்து சர்வதேச ரீதியில் நாட்டின் கௌரவத்தைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

(ஞான பிரசாந்தன்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »