(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏனைய பிரதேசங்களுக்கு முன்னெடுத்துச் செல்லும் அபிவிருத்தி திட்டங்களை மலையகத்துக்கும் முன்னெடுத்துச்செல்லும். குறிப்பாக மலையக மக்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம். அதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையை தற்போது ஆரம்பித்திருக்கிறோம் என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற மலையக மக்கள் எதிர்கொண்டுவரும் பிச்சினைகள் தொடர்பான அவசர சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
மலையகத்தில் மக்கள் விடுதலை முன்னணி அன்று முன்னெடுத்த சமுக புரட்சியில் படித்த இளைஞர்கள் அதில் கலந்துகொண்டார்கள். சமூக மாற்றத்துக்காக உயிர் தியாகம் செய்தார்கள். அந்த உயிர் தியாகம் செய்தவர்களில் எனது தந்தையும் ஒருவராவார். அதனால் மக்கள் விடுதலை முன்னணி மலையக மக்களுக்கு எதிராக வகுப்பு நடத்தியதாக மனோகணேசன் எம்பி தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
அதேநேரம் மலையகத்தில் இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டத்தை இவர்கள் முன்னெடுத்தாலும் அதில் பாரிய குறைபாடுகள் இருக்கின்றன. அவர்களின் காலத்தில் 1300 வீடுகள் கட்டுவதற்கு முன்னெடுக்கப்பட்டபோதும் 25 வீடுகள் மாத்திரமே கையளிக்கப்பட்டன. மிகுதி வீடுகள் பகுதியளவில் கட்டப்பட்டு, கைவிடப்பட்டிருந்தன. எமது அரசாங்கம் பொறுப்பெடுத்த பின்னர் சுமார் 6000 கோடி ரூபா செலவழித்து அந்த வீடுகளை நிர்மாணித்து, அந்த மக்களுக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
அத்துடன் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு 2ஏக்கர் காணி வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேநேரம் ஆலயங்கள் இருக்கும் நிலங்களை அந்த ஆலயங்களுக்கே வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். மலையக மக்களுக்கு கடந்த 75 வருங்கள் இடம்பெற்ற அநீதிகளை எமது ஒன்றரை வருடங்களில் நிவர்த்தியாக்க வேண்டும் என எதிர்பார்ப்பது வேடிக்கையாகும். மலையக மக்கள் இன்று அரசியல் ரீதியில் புதிய கலாசாரத்தை கொண்டுவந்திருக்கிறார்கள்.ஆரம்பத்தில் அந்த மக்கள் மலையக தலைவர்களால் துன்பத்துக்குள்ளான பல செயல்கள் காணப்படுகின்றன. ஆனால் இன்று படித்த இளைஞர் யுவதிகள் அந்த நிலையில் இருந்து மீண்டுவந்து, இன்று புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த மாற்றத்தை மலையக மக்கள் விட்டுக்கொடுப்பார்கள் என நான் ஒருபோதும் நம்புவதில்லை.
எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மலைய மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு காத்திரமான நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறோம். அண்மைக்காலத்தில் மலையகத்தில் பெருந்தோட்ட கம்பனிகளின் அராஜகம் காரணமாக தொழிலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் இடம்பெற்ற கூட்டத்தின்போது, பெருந்தோட்ட கம்பனிகளின் அராஜகத்தை நிறுத்துவதற்கு பல்வேறுபட்ட தீர்மானங்களை எடுத்தோம்.
எனவே மலையக மக்கள் இந்த நாட்டில் ஏனைய இனங்களுக்கு சமமாக வாழக்கூடிய மக்கள், ஆரம்பத்தில் தோட்ட மக்கள் என்றே அழைக்கப்பட்டு வந்தது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரே அந்த மக்களை மலையக தமிழ் மக்கள் என்ற கெளரவத்தை வழங்கி இருக்கிறோம். அத்துடன் மலையக மக்களின் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அந்த மக்களை வளர்ச்சி பாதையில் கொண்டுசெல்லும் பொறுப்பு எமது அரசாங்கத்துக்கு இருக்கிறது. அந்த மக்களும் இந்த அரசாங்கத்தின் மீது பாரிய நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதன் பிரதிபலிப்பாகவே நுவரேலியா மாவட்டத்தில் மேதின கூட்டத்தில் வரலாறு காணாத அளவு மலையக மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்திருந்தார்கள்.
அதனால் எமது அரசாங்கம் ஏனைய பிரதேசங்களுக்கு முன்னெடுத்துச் செல்லும் அபிவிருத்தி திட்டங்களை மலையகத்துக்கும் முன்னெடுத்துச்செல்லும். குறிப்பாக மலையக மக்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம். அதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கிறோம். சம்பள உயர்வை வழங்க முடியாது என்றார்கள். ஆனால் நாங்கள் அதனை செய்தோம். அதேபோன்று மலையகம் என்ற வார்த்தையை எமது பாடசாலை அச்சுப்புத்தகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். மலையக பகுதிகளில் காணப்படும் தமிழ் மொழி மூலம் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் விரைவில் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
