Our Feeds


Saturday, May 16, 2026

Zameera

PayPal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்தல் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு


 டிஜிட்டல் பொருளாதாரத்தின் தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையில் PayPal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்துவது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் கொழும்பு கோல்ஃபேஸ் ஹோட்டலில் நடைபெற்றது. 


இதுவரை காலமும் இலங்கையர்களின் PayPal கணக்குகள் "பணம் அனுப்புவதற்கு மாத்திரம்" (Send Only) வரையறுக்கப்பட்டிருந்ததுடன், இதன் மூலம் பயனாளிகள் வெளிநாடுகளுக்குக் கொடுப்பனவுகளைச் செய்ய முடிந்த போதிலும், சர்வதேச வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை இலங்கைக்குப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. இந்த வரையறை காரணமாக, இலங்கையின் சுயாதீன தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகங்கள் பெரும் தடைகளை எதிர்கொண்டிருந்தன. 


இந்தச் சேவை விரிவுபடுத்தப்பட்டதன் மூலம், இணையவழி ஊடாகச் சேவைகளை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்கள் தங்களது கொடுப்பனவுகளை நேரடியாக நாட்டின் வங்கிக் கணக்குகளுக்குப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், இதன் மூலம் நாட்டிற்கு கிடைக்கும் உத்தியோகபூர்வ வெளிநாட்டு நாணய மாற்று வருமானத்தின் அளவும் அதிகரிக்கும். 


பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தைகள், தாமதங்கள் மற்றும் தொடர்ச்சியான பல முயற்சிகளுக்குப் பிறகு பெற்றுக்கொள்ளப்பட்ட இந்த முன்னேற்றமானது, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம், சுயாதீன தொழில் சமூகம் (Freelancer), தகவல் தொழில்நுட்பத் துறை, ஆரம்பக்கட்ட வர்த்தகங்கள் (Startups), சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகங்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஈ-வர்த்தகம் (e-commerce) சார்ந்த தொழில்துறைகள் போன்றவற்றுக்கு தனித்துவமான திருப்புமுனையாக அமையும் எனக்கூறலாம். 


இந்த ஒத்துழைப்பின் படி, ஆரம்பகட்டமாக, மக்கள் வங்கி (BOC), கொமர்ஷல் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றின் மூலம் PayPal சேவைகள் இந்நாட்டிற்குள் செயல்படுத்தப்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் ஏனைய வங்கிகளும் இதனுடன் இணையவுள்ளன. 


1998 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் தொடங்கப்பட்ட PayPal நிறுவனம், உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் கட்டண தளங்களில் ஒன்றாக உள்ளதுடன், இது 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் 430 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளுக்குச் சேவை வழங்குவதுடன், ஆண்டுதோறும் 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளில் ஈடுபடுகிறது. இது உலகளாவிய சுயாதீன தொழில் தளங்களிலும், ஈ-வர்த்தக (e-commerce) தளங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. 


இந்நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான நிகழ்ச்சி நிரலின் முதன்மை நோக்கங்களான அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை உருவாக்குதல், டிஜிட்டல் தொழில்முனைவோரை ஊக்குவித்தல் மற்றும் சர்வதேச சந்தையுடனான தொடர்பை வலுப்படுத்துதல் போன்ற இலக்குகளை அடைவதற்கு இந்த ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும். எல்லைகடந்த கட்டண சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம், இந்நாட்டின் சிறு வர்த்தகங்கள் மற்றும் தொழில்முனைவோர் உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகளில் மேலும் தீவிரமாகப் பங்களிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். 


இந்தச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் விதம் குறித்த மேலதிக விபரங்களை, அந்தந்த வங்கிகள் எதிர்வரும் நாட்களில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறியப்படுத்தும். அத்துடன், மேலதிக விபரங்கள் தேவைப்படும் நபர்கள் அல்லது வர்த்தக நிறுவனங்கள், தாம் கொடுக்கல்-வாங்கல் செய்யும் வங்கியை நேரடியாகத் தொடர்புகொண்டு அது பற்றிய விபரங்களைக் கேட்டறியலாம். 


இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வளர்ச்சித் திட்டமானது நியாயத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய அடிப்படை கொள்கைகளை மையமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்றும், அதில் இந்த டிஜிட்டல் மாற்றம் ஒரு சிறப்பான அங்கமாகும் என்றும் சுட்டிக்காட்டினார். 


இந்த ஒத்துழைப்பானது நம் அனைவரும் எதிர்பார்க்கும் பலன்களைத் தரும் என நம்பிக்கை வெளியிட்ட பிரதமர், இது பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும், தாங்கும் திறனை வளர்ப்பதற்கும் மாத்திரமன்றி, மற்றவர்களைப் பின்பற்றுபவராக மட்டும் இருக்காமல், நமக்கே உரிய தனித்துவமான திறன்களுடன் கூடிய வலுவான மற்றும் நம்பகமான நாடாக பிராந்திய ரீதியிலும் உலக ரீதியிலும் நம்மை நிலைநிறுத்துவதற்கும் இது உதவும் எனத் தெரிவித்தார். 


இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, 


இது உண்மையிலேயே ஒரு மறக்கமுடியாத தருணமாகும். டிஜிட்டல் பொருளாதாரத்தில் இலங்கையின் பங்களிப்பு சர்வதேச ரீதியில் மதிப்பீட்டிற்குள்ளாகி வருவதையும், அதேபோன்று பிராந்திய ரீதியிலும் உலகளாவிய ரீதியிலும் ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளது என்பதையும் இது உறுதிப்படுத்துகிறது. இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்காக எம்மிடம் உயர்ந்த இலக்குகள் காணப்படுகின்றன. எதிர்காலத்தில் இது பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் ஒரு துறையாகவும், அதேபோன்று வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான ஒரு மூலமாகவும் அமையும் என எதிர்பார்க்கிறோம். 


இத்துறைக்குள் மிகவும் திறமையான சுயாதீன தொழில் வல்லுநர்கள் (Freelancers) எம்மிடம் உள்ளனர். வெளிப்படைத்தன்மையுடனான மற்றும் பாதுகாப்பான நிதிச் சேவை அமைப்பொன்றை நிறுவுவது மூலோபாய ரீதியாகவும், அதேபோல் இத்துறையில் எமது தனித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் மிகவும் முக்கியமானதாகும். 


சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறைகள் (SME), ஒன்லைன் சேவைகள், ஈ-வர்த்தகம் (E-commerce) மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய இவை அனைத்துமே ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் மாதங்கள் மற்றும் சில வருடங்களுக்குள், மிகவும் கவர்ச்சிகரமான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கக்கூடிய, அதிவேகமாக விரிவடைந்து வரும் ஒரு துறையாகவே நான் இதனைக் காண்கிறேன். 


மேலும், இணையவழி சேவைகளும் கொடுப்பனவுகளும் (payments) மிகவும் பாதுகாப்பான, சட்டப்பூர்வமான மற்றும் பொறுப்புக்கூறத்தக்க கட்டமைப்பொன்றின் கீழ் கொண்டு வரப்படுவது மிகவும் முக்கியமானது என்று நான் நம்புகிறேன். மோசடி நடவடிக்கைகள், பாதுகாப்பற்ற அமைப்புகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் தொடர்பாக உலகளவில் உருவாகி வரும் சூழ்நிலைகளை நாம் பார்த்திருக்கிறோம். எனவே, நாம் முன்னோக்கிச் செல்லும்போது, பொறுப்புக்கூறலையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகின்ற, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பிற சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தளத்தை (platform) நிறுவுவது இன்றியமையாத ஒரு விடயமாகும். 


நாங்கள் டிஜிட்டல் பொருளாதாரம், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறை (SME) மற்றும் ஈ-வர்த்தகம் (E-commerce) ஆகியவற்றை பரந்த அளவில் வளர்ச்சியடையக்கூடிய சாத்தியக்கூறுகள் கொண்ட துறைகளாகக் கருதுகிறோம். எமது பொருளாதார வளர்ச்சித் திட்டம் இரண்டு அடிப்படைப் பண்புகளைச் சுற்றி கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதாவது, நியாயத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவையாகும். 


சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி (SME) துறையை விரிவுபடுத்துதல், சுயாதீன தொழில் வல்லுநர்களுக்கு (Freelancers) கைகொடுத்து உதவுதல், ஈ-வர்த்தகத்தை (E-commerce) முன்னேற்றுதல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் போன்றவற்றைப்பற்றி சிந்திக்கும்போது, நமது நாடு நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளான சமூக அநீதி, பொருளாதார சமத்துவமின்மை மற்றும் அபிவிருத்தியில் காணப்படும் கடுமையான முரண்பாடுகள் ஆகியவற்றிற்கும் நாம் தீர்வுகளைக் காண வேண்டும். நமது அபிவிருத்தி என்பது அனைவருக்கும் பலனளிக்கக்கூடிய, நியாயமான அதேவேளை சமூகப் பொறுப்புணர்வுமிக்க ஒன்றாக அமைய வேண்டும். 


இந்த மாற்றத்திற்காக ஆர்வத்துடன் பங்களிப்புச் செய்யும் நமது இளைய தலைமுறையினர், இலங்கையின் எதிர்கால அபிவிருத்தியில் அந்த பெறுமதிகளைப் பிரதிபலிப்பதற்குக் தலைமைத்துவத்தை வழங்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். இந்த ஒத்துழைப்பு நம் அனைவரும் எதிர்பார்க்கும் பலன்களைத் தேடித்தரும் என்று நான் நம்புகிறேன். இது நமது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் அதன் தாங்கும் திறனை வளர்ப்பதற்கும் உதவுவது மட்டுமல்லாமல், நாம் மற்றவர்களைப் பின்பற்றுபவராக மட்டும் இருக்காமல், நமக்கே உரிய தனித்துவமான திறமைகளைக் கொண்ட வலுவான மற்றும் நம்பிக்கையான நாடாக பிராந்திய ரீதியிலும் உலக ரீதியிலும் நிலைநிறுத்துவதற்கும் வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »