Our Feeds


Sunday, May 3, 2026

SHAHNI RAMEES

அவ்வளவு நம்பிக்கை இருக்கின்றதென்றால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்! - SJB சவால்

 


தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு

நிலையானதாக இருக்குமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட கருத்தானது ஜனநாயக விழுமியங்களுக்கு முரணானதாகும். உண்மையான மக்கள் ஆணையை அவர் பரிசோதிக்க விரும்பினால் நீண்டகாலமாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பகிரங்கமாக சவால் விடுத்துள்ளது.


நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மே தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தமது அரசாங்கத்தின் பயணமானது குறுகிய காலத்திற்கானதல்ல என்றும், அடுத்த தசாப்த காலத்திற்கு தமது ஆட்சி பலமாக நீடிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.


ஜனாதிபதியின் இந்த உரை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை வினவியபோதே அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு சவால் விடுத்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,


ஜனாதிபதிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் அந்தளவுக்கு மக்கள் மீது நம்பிக்கை இருக்குமென்றால், கடந்த 9 ஆண்டுகளாக நடத்தப்படாமல் முடக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்திக் காட்டுமாறு சவால் விடுக்கின்றோம். மக்கள் ஆணை என்பது ஆட்சியாளர்களால் மேடைகளில் சுயமாக பிரகடனப்படுத்திக் கொள்வதல்ல. அது தேர்தல் களங்களில் மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.


மேலும், தேர்தல்களை பிற்போடுவதன் மூலம் மக்கள் கருத்தை மறைக்க முடியாது. மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதன் மூலமே தற்போதைய அரசாங்கத்தின் மீதான மக்களின் உண்மையான மனநிலை என்ன என்பது வெளிப்படும். மக்கள் ஆணை என்பது அநுரவோ அல்லது தேசிய மக்கள் சக்தியோ அல்ல.



எனவே தான் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம். அவ்வாறு தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் மக்கள் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள நாம் தயாராகவுள்ளோம் என்றார். 


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »