Our Feeds


Sunday, June 7, 2026

Admin

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்து - உயிரிழப்பு 13 ஆக உயர்வு!


ஹொரணை, அங்குருவாதொட்ட, பட்டகொட பகுதியில் இயங்கி வந்த 'செனெஹஸே கெதெல்ல' (அன்பின் இல்லம்) முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்தின் போது காயமடைந்த மேலும் 6 பேர் ஹொரணை மற்றும் கல்பாதி வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த ஜூன் 3ஆம் திகதி மாலை இந்த இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, அங்கு சுமார் 72 பேர் தங்கியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்ததுடன், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இல்லத்தின் உரிமையாளர், ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லக்மினி விதானகே உத்தரவிட்டு ள்ளார். நீதவான் லக்மினி விதானகே மற்றும் அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் ஆகியோர்  நேரில் சென்று களப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இந்த இல்லம் முறையான பதிவு மற்றும் அனுமதியின்றி இயங்கி வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சர் உபாலி பன்னிலகே, முதியோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஐவருக்கு மேற்பட்ட முதியவர்களை பராமரிக்கும் எந்தவொரு இல்லமும் தேசிய முதியோர் செயலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும்.

2000- ஆம் ஆண்டின் முதியோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் எண் 9- இன் படி, ஐந்துக்கும் மேற்பட்ட முதியவர்களை முதியோர் இல்லமாகக் கொண்டு இயங்கும்  எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ தேசிய முதியோர் செயலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி மில்லனிய பிரதேச செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில், இந்த இல்லத்தின் அவலநிலை மற்றும் அபாயகரமான சூழல் குறித்து  தேசிய முதியோர் செயலகத்திற்குத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையில் இந்த இல்லத்தின்அதிகபட்ச கொள்ளளவு 15 பேருக்கு மட்டுமே என்றபோதிலும், அங்கு 48 பேர் கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். ஒரே கட்டிலில் இருவர் உறங்கியதுடன், கட்டில்கள் இன்றி பலர் தரையில் உறங்க வேண்டிய அவல நிலை காணப்பட்டது.

இல்லத்தினுள் கடுமையான துர்நாற்றம் மற்றும் அசுத்தமான சூழல் நிலவியதுடன், போதிய கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகள் இருக்கவில்லை. இல்லத்தின் பின்புறத்தில் பாதுகாப்பு வேலி இல்லாததால், மனநல பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடும் அபாயம் நீடித்தது என்றுள்ளது.

இந்நிலையில், தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ள மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »