தேர்தல்களின் போது வாக்களித்ததை உறுதிப்படுத்துவதற்காக
விரலில் மை பூசும் முறையை நீக்குவதன் மூலம், ஒரு தேர்தலின் போது சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க முடியும் என ‘பஃவ்ரல்’ (PAFFREL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.இந்தத் தீர்மானம் அனைத்து வகையிலும் மிகச் சிறந்த ஒரு தீர்மானம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘பஃவ்ரல்’ அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று (24) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த யோசனை திடீரென உருவானது அல்ல என்றும், பல ஆண்டுகளாக தேர்தல் துறை, அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கிடையில் கலந்துரையாடப்பட்ட விடயம் என்றும் அவர் தெரிவித்தார்.
குறித்த முறையை நீக்குவதன் மூலம் மை இறக்குமதி, விநியோகம் மற்றும் அதற்குத் தேவையான நிர்வாகச் செயற்பாடுகளுக்காகச் செலவிடப்படும் தொகை பெருமளவு குறைவதுடன், தேர்தல் செலவுகளைக் குறைப்பதன் மூலம் பொதுமக்களின் பணத்தைச் சேமிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
வாக்களிக்கும் போது அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், வாக்காளரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது கடுமையாக்கப்பட்டுள்ளது.
எனவே, மற்றுமொருவருக்குப் பதிலாக வாக்களிக்கும் சந்தர்ப்பங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன.
இதன்காரணமாக, அழியாத மையை விரலில் பூசும் தேவை முன்பு இருந்ததைப் போல கடுமையாக இல்லை என்ற கருத்து நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வாக்காளர் ஒருவர் வாக்களித்ததை உறுதிப்படுத்த விரலில் அழியாத மை பூசுவது பல தசாப்தங்களாக இலங்கையின் தேர்தல் செயன்முறையின் ஒரு அங்கமாக இருந்து வந்த போதிலும், வாக்காளர் இடாப்பு தயாரிப்பதில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், தற்போது கள்ள வாக்குகள் அளிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும் ரோஹண ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்தார்.
