Our Feeds


Wednesday, June 3, 2026

Zameera

பிள்ளையானின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது ; அவருக்காக நாங்கள் குரல் கொடுப்போம் - உதய கம்மன்பில

(இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்துக்காகவே பிள்ளையான் கைது செய்யப்பட்டார் என்று அரசாங்கம் வெளியில் குறிப்பிடுகிறது. ஆனால் நீதிமன்றத்தில் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலே அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. பிள்ளையானின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அவருக்காக நாங்கள் குரல் கொடுப்போம் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை மற்றும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை ஆகியவற்றை சவாலுக்குட்படுத்தி பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு செவ்வாய்க்கிழமை (02) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் உதய கம்மன்பில மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் தெரிவித்ததாவது,

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது பிள்ளையான் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானதொரு செயற்படுமாறு வலியுறுத்தி பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்கு தொடர்ச்சியாக பிற்போடப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் தான் பிள்ளையான் கைது செய்யப்பட்டார் என்று ஜனாதிபதியும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் வெளியில் குறிப்பிடுகிறார்கள். ஆனால் நீதிமன்றத்துக்கு கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரை கடத்தி காணாமலாக்கிய விவகாரம் தொடர்பிலே அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கைது செய்யப்பட்ட பிள்ளையான் சுமார் 14 மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது பாதுகாப்பு தொடர்பில் எமக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இல்லாத அக்கறை அரசாங்கத்துக்கு உள்ளது. அதனால் தான் அவர் அதிபாதுகாகாப்பு வலயமாக உள்ள வெலிசர கடற்படை முகாமில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பிள்ளையானின் மனித உரிமை மீறப்பட்டுள்ளது. அவருக்காக நாங்கள் குரல் கொடுப்போம்.அவரை பாதுகாப்போம். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் யாரையாவது பகடைகாயாக்குவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. உண்மையை வெளிக்கொண்டு வரும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது என்றார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »