(எம்.ஆர்.எம்.வசீம்)
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து தமது முறைப்பாடுகள் மற்றும் பணித்தள சிக்கல்களை மிக விரைவாகவும் எளிமையாகவும் சமர்ப்பிப்பதற்காக லங்காகொநெக்ட்' எனும் புதிய கையடக்கத்தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.South Asians & Diaspora
இந்த முறைப்பாட்டு முகாமைத்துவ செயலி, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில், கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் நேற்று (17) புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. சர்வதேச வீட்டுப் பணியாளர் தினத்தை முன்னிட்டு இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செயலியை ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் பயன்படுத்த முடியும்.
புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில் எதிர்கொள்ளும் சிக்கல்களை இந்தச் செயலி மூலம் நேரடியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சமர்ப்பிக்கலாம்.Travel Guides & Travelogues
அதேபோன்று கல்வி அல்லது வதிவிடத்திற்காக வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கன்சியூலர் பிரிவுக்கு இந்த செயலி ஊடாக நேரடியாக முறைப்பாடுகளை அனுப்ப முடியும். முறைப்பாடுகளை எழுத்துமூலமாக மாத்திரமன்றி, குரல் பதிவுகள் மற்றும் காணொளிகள் மூலமும் சமர்ப்பிக்க வாய்ப்பளிக்கப்பபட்டுள்ளது.
உலகில் எந்த நாட்டிலிருந்தும் இந்த செயலியைப் பயன்படுத்தலாம் என்பதுடன், தாங்கள் சமர்ப்பித்த முறைப்பாட்டின் தற்போதைய நிலையையும் இந்த செயலி ஊடாக மிக இலகுவாக தெரிந்துகொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றுடன் இணைந்து, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நிதி உதவியுடன் இலங்கை மொபிடெல் நிறுவனத்தினால் இந்த கையடக்க தொலைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியை கூகுள் பிலே ஸ்டோர் மற்றும் எப்பல் எப் ஸ்டோர் ஆகியவற்றின் ஊடாக தற்போது இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
