Our Feeds


Monday, June 15, 2026

Zameera

கண்டி தோட்டங்களை துண்டுகளாக்கி விற்க அரசாங்கம் முயற்சி - வேலுகுமார்


 (எம்.ஆர்.எம்.வசீம்)


நாட்டின் வளங்களை பாதுகாப்பதாக  பிரசாரம்  செய்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் கண்டி மாவட்டத்தில் அதிகமான தோட்டங்களை துண்டுகளாக பிரித்து விற்பனை செய்ய நடவடிக்கை  எடுத்து வருகிறது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  வீதிக்கிறங்கி போராட அனைவரும் ஒன்றுபட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் தெரிவித்தார்.


சத்தியத்தை வெற்றிபெறச்செய்வோம் எனும் தொனிப்பொருளில் கூட்டு எதிர்க்கட்சி ஞாயிற்றுக்கிழமை (14) கண்டியில் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,


நாட்டை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய காலம் தற்போது எமக்கு வந்திருக்கிறது. அதனால் அரசியல் கட்சி தலைவர்கள் நாட்டை பாதுகாக்கம் போராட்டத்தில் ஒன்றாக இணைந்துகொண்டுள்ளனர். தலைவர்கள் இவ்வாறு நாட்டை பாதுகாக்கும் போராட்டத்தில் இணைந்துசெயற்படும்போது நாங்கள் எமது மாகாணத்தை பாதுகாத்துக்கொள்ள அரசியல் போராட்டத்தை மேற்கொள்வதற்கான நேரம் வந்துள்ளது.  


தித்வா அனர்த்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் கண்டியாகும். ஆனால் பாதிக்கப்பட்ட ஒரு சிறிய பாலம் ஒன்றை கூட அரசாங்கத்தினால் மீள கட்டியெழுப்ப முடியாமல் போயிருக்கிறது. அதனால் இந்த அரசாங்கத்தால் ஒன்றும் முடியாது என்பதை மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்துக்கு ஆதரவளித்த அதிகமானவர்கள் தற்போது அரசாங்கத்தை விட்டு வெளியெறியுள்ளனர்.


நாட்டின் வளங்களை பாதுகாப்பதாக  பிரசாரம் செய்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.ஆனால் கண்டி மாவட்டத்தில் இருக்கும் தோட்டங்களை   துண்டுகளாக பிரித்து ஏல விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்றது. 100 ஹெக்டயர் அடிப்படையில் ஆயிரம் ஹெக்டயாராக பிரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.


கம்பளை லெவனன் தோட்டத்தை 7 பகுதிகளாக பிரிக்கிறார்கள். தெல்தொட்ட தோட்டத்தை 8 துண்டுகளாக பிரிக்கிறார்கள். இவ்வாறு கண்டி மாவட்டத்தில் அதிகமான தோட்டங்களை பிரித்து, விற்னை செய்ய நடவடிக்கை எடுப்பட்டிருக்கிறது.


அதனால் தோட்டங்களை துண்டுகளாக பிரித்து விற்பனை செய்ய எடுத்துவரும் நடவடிக்கைக்கு எதிராக நாங்கள் எமது போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். அதற்காக நாங்கள் வீதிக்கிறங்கி போராட்டம் மேற்கொள்ள அணிதிறள ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  இந்த அரசாங்கத்தை விரட்டியடித்து சுபீட்சமான அரசாங்கம் ஒன்றை அமைத்துக்கொள்ள ஒன்றுபட வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »