Our Feeds


Saturday, June 20, 2026

Zameera

உயிர்த்த ஞாயிறு விசாரணைகள் மக்களின் விமர்சனங்களுக்குப் பதிலளிப்பதற்காக அரங்கேற்றப்படும் வெறும் அரசியல் நாடகமா?




 (க.சிவலிங்கமூர்த்தி) 


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் உண்மையான புலனாய்வு விசாரணைகளா அல்லது மக்கள் மத்தியில் எழுந்துள்ள கடுமையான விமர்சனங்களுக்குப் பதிலளிப்பதற்காக அரங்கேற்றப்படும் வெறும் அரசியல் நாடகங்களா என்ற பலத்த சந்தேகம் எமக்குக் காணப்படுகிறது என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். 


அத்தோடு அவர், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்கு ஒரு சாதாரண காகிதத் தாளில் உணவளித்தாலும் அதில் எவ்விதத் தவறும் இல்லை. ஏனெனில், அந்தத் தடுப்புக் காவல் அறைகளுக்குள் இதைவிடப் பாரிய குற்றங்களையும் சித்திரவதைகளையும் சலே போன்ற அதிகாரிகளே கடந்த காலத்தில் புரிந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். 


முன்னிலை சோசலிசக் கட்சி காரியாலயத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


அவர் அங்கு மேலும் விவரிக்கையில்,


இந்த விவகாரத்தில் வெறுமனே ஒரு காகித ஆவணத்தை ஒப்படைப்பது மாத்திரம் முதன்மைப் பிரச்சினை அல்ல. உதய கம்மன்பில போன்றவர்கள் தடுப்புக் காவலில் சித்திரவதைகள் செய்யப்படுவதாக வெளியிடும் ஆவணங்களின் உண்மைத்தன்மை எமக்குத் தெரியாது. ஆனால், சலேவுக்கு ஒரு சாதாரண காகிதத் தாளில் உணவளித்தாலும் அதில் தவறில்லை என்றே நாம் கருதுகிறோம். ஏனெனில், இந்த அரச நிறுவனங்களின் தடுப்புக் காவல் அறைகளுக்குள் கைதிகளுக்கு இதைவிடப் பயங்கரமான குற்றங்களையும் சித்திரவதைகளையும் சலே போன்ற அதிகாரிகளே முன்னின்று நடத்தியுள்ளனர். எண்பதுகளில் எமது தோழர்களுக்கு நேர்ந்த கொடுமைகளையும், வசந்த முதலிகே எவ்வாறு சிறைவைக்கப்பட்டிருந்தார் என்பதையும் நாம் அறிவோம்.


கல்வெவ சிறிதம்ம தேரருக்கு டெங்கு நோய் ஏற்பட்ட போது, அவருக்குரிய மருத்துவச் சிகிச்சைகளையோ அல்லது கஞ்சி, பால் போன்ற திரவ உணவுகளையோ வழங்க அனுமதிக்காமல் சிறை அறைக்குள்ளேயே அவரைக் கொலை செய்ய முயற்சித்தனர். அவர் கடுமையான மூச்சுத்திணறலுடன் தேசிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது, அவரது முகமூடியை அகற்றக் கூட பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மருத்துவர்களை அனுமதிக்கவில்லை. அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவும் எங்களை எவ்வாறு நடத்தினார்கள், எத்தகைய கொடூரங்களை எதிர்கொண்டோம் என்பதை நாம் அறிவோம். இவ்வாறான மனிதாபிமானமற்ற அடக்குமுறைகளே இங்கு நிலவின. எனவே, அரச நிறுவனங்களின் இந்த தன்னிச்சையான மற்றும் வன்முறையான போக்குகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன், இவற்றுக்கு வழிவகுக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நீதி வழங்கப்பட வேண்டும் என்பதில் எமது கொள்கை மிகவும் தெளிவானதாகும். எனினும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையே நிலவும் தனிப்பட்ட முரண்பாடுகளையோ அல்லது பகைமையையோ அடிப்படையாகக் கொண்டு இந்த விசாரணைகளை முன்னெடுக்க முடியாது. இத்தாக்குதலுக்குப் பின்னால் ஒரு தீவிரவாதக் குழுவின் தலையீடு இருப்பது மிகத் தெளிவாகப் புலனாகிறது. அதில் உள்வாங்கப்பட்டிருந்த சில நபர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகக் காணப்பட்டனர். அவ்வாறாயின், அவர்களைப் பின்னணியில் இருந்து இயக்கியது யார் என்ற பிரதான கேள்வி எழுகின்றது. இத்தாக்குதல் பற்றிய புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், விசேட பிரமுகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எவ்விதப் படியும் எடுக்கப்படவில்லை. சொகுசுப் பிரமுகர்கள் அனைவரும் அன்று பாதுகாப்பாக இருந்தனர்; வழக்கமாக தேவாலயங்களுக்குச் செல்பவர்கள் கூட அன்று வழிபாடுகளுக்குச் செல்லவில்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவின் தந்தை குண்டு வெடிக்கப் போவதை முன்கூட்டியே அறிந்திருந்தார். ஆனால், தூய மனதோடு வழிபாடுகளில் ஈடுபடச் சென்ற அப்பாவிப் பொதுமக்களுக்கு எவ்வித எச்சரிக்கைச் சமிஞ்கைகளும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாகவே பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டனர்.


அதேவேளை, தற்போதைய அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இந்தியாவின் தலையீடு இருப்பதாகத் தனக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். சாரா புலஸ்தினி இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற விதம் மற்றும் இந்தியாவுடனான அவரது தொடர்புகள் குறித்துப் பாரிய அளவிலான தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. எனவே, இச்சம்பவத்தில் இந்தியாவின் பங்கு எவ்வாறு அமைந்தது, அதிகாரிகளின் அலட்சியப் போக்கு எவ்வாறு இருந்தது, ராஜபக்சக்கள் இச்சதித் திட்டத்தை முன்கூட்டியே அறிந்திருந்தார்களா மற்றும் இதன் பின்னால் அவர்களின் அரசியல் தலையீடு காணப்பட்டதா போன்ற அனைத்துக் காரணிகளையும் ஒட்டுமொத்தமாகவே ஆராய வேண்டும். அதை விடுத்து, இதில் உள்ள ஒரு பகுதியை மட்டும் பிரித்தெடுத்து விசாரிப்பதால் எவ்விதப் பயனும் இல்லை. அது வெறும் அரசியல் காட்சியாகவே முடிவடையும்.


தற்போது சுரேஷ் சலே பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி நபர்களைக் கைது செய்வதற்கு நாம் முற்றிலும் எதிரானவர்கள். நாட்டின் சாதாரண தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் ஒரு சந்தேக நபரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, விசாரணை நிமித்தம் அவருக்குப் பிணை வழங்காமல் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவானிடம் கோருவதற்குப் போதிய சட்ட ஏற்பாடுகள் உள்ளன. அவ்வாறு இருக்கையில், இவ்வாறான கொடூரமான அடக்குமுறைச் சட்டங்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதை நியாயப்படுத்துவதற்காகவே பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.


சுரேஷ் சலே தற்போது தம்மைக் கைது செய்யக் கூடாது என்று நீதிமன்றத்திடம் தற்காப்பு உத்தரவு கோர முற்படுகிறார். முன்கூட்டியே நீதிமன்றத்துக்குச் சென்று இவ்வாறான உத்தரவுகளைக் கோருவதானது, "கோட்டாபய ராஜபக்ச அன்று கடுகு தின்றிருந்தால், இன்றுதான் அவரது மூளை சுடத் தொடங்கியிருக்கும்" என்ற பழமொழிக்கு ஏற்பவே அமைந்துள்ளது. லலித் மற்றும் குகன் ஆகிய எமது தோழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு பல வருடங்களாக நீதிமன்றம் உத்தரவிட்டும் சலே சமூகமளிக்கவில்லை. அதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குச் சென்று தடை உத்தரவு கோரினார். இப்போது இணையவழியில் சாட்சியமளிப்பதாகக் கூறுகிறார். அரசாங்கம் அரங்கேற்றும் இந்த நாடக மேடையில் பொதுமக்கள் ஏமாறக் கூடாது. மக்களின் அரசியல் போராட்டத் தளம் வேறு திசைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். அப்போதுதான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உண்மையான நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.



பிரதி அமைச்சர் சிதுரத்ன போன்றவர்கள் இது ஒரு தேர்தல் வாக்குறுதி என்றும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சுரேஷ் சலேவுக்கு எந்தவொரு துன்புறுத்தலையும் செய்யவில்லை என்றும் கூறி விசாரணைகளை நியாயப்படுத்துகின்றனர். எமது பிரதான விமர்சனம் என்னவென்றால், கடந்த காலத்தில் இந்த விசாரணைகள் திட்டமிட்டு முடக்கப்பட்டிருந்தன என்பதாகும். தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விசாரணைகள் உண்மையானவையா அல்லது மக்கள் மத்தியில் எழும் கடுமையான சமூக விமர்சனங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகச் செய்யப்படும் தற்காலிக முயற்சிகளா என்பது எதிர்காலத்திலேயே நிரூபிக்கப்படும். சுனில் வடகல போன்றவர்கள் அல்லது வேறு எவராயினும், அவர்கள் சொல்வதற்கும் செய்வதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை பொதுமக்கள் மிகக் குறுகிய காலத்துக்குள் புரிந்துகொள்வார்கள் என்றார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »