Our Feeds


Tuesday, June 23, 2026

SHAHNI RAMEES

ஏதும் மாறப்போவதில்லை! - சிறைக்கு செல்லும்போது தேசப்பற்றாளர்கள்??? - சுனில் ஹந்துனெத்தி தடாலடி

 


அரச நிதியை மோசடி செய்தவர்கள் சிறைக்கு

செல்லும்போது தேசப்பற்றாளர்கள் போல் கருத்து தெரிவிக்கிறார்கள். மக்களுக்காக குரல் கொடுப்பதால் அரசாங்கம் பழிவாங்குவதாக ஊடகங்களுக்கு குறிப்பிடுகிறார்கள். ஆனால் தான் ஏன் சிறை செல்கிறோம் என்பதை அவர்கள் குறிப்பிடுவதில்லை. வழக்குகள் நெருங்கும்போது கலக்கமடைந்து பாராளுமன்ற சபை நடுவில் வந்து முரண்பட்டுக்கொள்வதால் ஏதும் மாறப்போவதில்லை. சிறந்த சட்டத்தரணிகளின் உதவியை பெற்று வழக்கு விசாரணைகளுக்கு முகங்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி வலியுறுத்தினார்.


பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23)  நடைபெற்ற சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு, சிறப்பு பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டளைகள், இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான விதிமுறைகள் என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,


கடந்த அரசாங்கங்களில் நீதித்துறையின் மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. அரசியல் செல்வாக்கு ஆதிக்கம் செலுத்தியது. அவ்வாறான தன்மை தற்போது கிடையாது. அதற்கான அவசியமும் எமக்கு கிடையாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை முன்னிலைப்படுத்தியே செயற்படுகிறோம்.


நீதிமன்ற தீர்ப்புக்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கடந்த அரசாங்கங்களில் எதிர்தரப்பில் இருந்து ஆளும் தரப்பு பக்கம் சென்றவர்கள், பாராளுமன்ற உறுப்புரிமையை விற்பனை செய்தவர்கள். பாதாள குழுக்களுடன் தொடர்புக் கொண்டிருந்தவர்கள் இன்றும் எதிர்தரப்பில் உள்ளார்கள். முழு நாள் விவாதத்தை நடத்தி முன்னாள் பிரதம நீதியரசர் பதவி நீக்கப்பட்ட வரலாறும் உள்ளது. அவ்வாறான கறைபடிந்த சம்பவங்களும் உள்ளன.


கடந்த கால கறுப்பு வரலாற்று தன்மை இப்போது இல்லை. கட்சியை மாற்றி வழக்கு நடவடிக்கைகளில் இருந்து தற்போது தப்பிக்க முடியாது. வழக்கு விசாரணைகள் நெருங்கி வரும் போது ஊடகங்கள் முன்பாக வந்து புலம்புகிறார்கள். போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.குற்றவாளி நன்கு அறிவார், குற்றத்தின் பாரதூர தன்மையை.


அரச நிதியை மோசடி செய்தவர்கள் சிறைக்கு செல்லும்போது தேசபற்றாளர்கள் போல் கருத்து தெரிவிக்கிறார்கள். மக்களுக்காக குரல் கொடுப்பதால் அரசாங்கம் பழிவாங்குவதாக ஊடகங்களுக்கு குறிப்பிடுகிறார்கள். ஆனால் தான் ஏன் சிறை செல்கிறோம் என்பதை அவர்கள் குறிப்பிடுவதில்லை.


மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நாங்கள் பாதுகாப்போம். சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் எவரும் செயற்பட முடியாது. அரச நிதியை மோசடி செய்து சிறைக்கு சென்று வருபவர்களை மாலை அணிவித்து வரவேற்கும் மனநிலையில் நாட்டு மக்கள் இல்லை.ஊழல்வாதிகளை நம்பி வாழ்ந்தவர்கள் வேண்டுமாயின் புகழ் பாடலாம், மாலை அணிவிக்கலாம்.


அரச நிதியை மோசடி செய்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். தண்டனை வழங்கலை தாமதப்படுத்தக் கூடாது என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள். மக்களின் கோரிக்கையையே ஜனாதிபதி நிறைவேற்றுகிறார். நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுவதற்குரிய வசதிகளை வழங்கியுள்ளார். இது நீதித்துறை மீதான அழுத்தமல்ல.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »