Our Feeds


Tuesday, June 30, 2026

Admin

அநுரவின் வாயப் போலவே எல்லாம் பொய்! - மீண்டும் சிறை செல்லும் போது கதறிய பிள்ளையான்.



“என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்  குற்றச்சாட்டுக்கள். போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்” என்று நீதிமன்றத்திலிருந்து கொண்டுசெல்லப்படும்போது ஊடகங்கவியலாளர்களைப் பார்த்துக் கூறிய பிள்ளையான், “இது உங்களுக்கு சந்தோஷமான விடயம்தானே” என்றார்.


பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.


பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.


2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நிகழ்ந்த ஐந்து கொலைகள் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் என்ற 'பிள்ளையான்' மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.


கடந்த 15ஆம் திகதி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனை அடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு விடுக்கப்பட்ட பணிப்புரையின் அடிப்படையில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.


ஐந்து ஆட்கொலை தொடர்பில் சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் கல்லடியில் உள்ள காணி பிரச்சினை ஒன்று தொடர்பிலும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பிலேயே இன்றைய நீதிமன்ற விசாரணை நடைபெற்றன.


இது தொடர்பான வழக்கு விசாரணை  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி அ. தர்சினி முன்னிலையில் நடத்தப்பட்டது.


இன்றைய தினம் சாட்சிகளும் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் இது தொடர்பான விசாரணை தொடர்ந்தது.


அத்துடன் பிள்ளையான் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகளால் பிள்ளையானை மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைப்பதற்கான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.


இதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட வழக்கினை சாதாரண வழக்குக்கு மாற்றுமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


வழக்கை பரிசீலித்த நீதிமன்றம், பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று கல்லடி காணி பிணக்கு தொடர்பான வழக்கினை ஒக்டோபர் 29ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.


2008ஆம் ஆண்டில் டி-56 ரக துப்பாக்கிகளால் நிகழ்த்தப்பட்ட கொலைகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


2008ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள கல்லடி முருகன் கோவில் அருகே, முன்னாள் காவல்துறை அதிகாரி உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், 2008ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி காத்தான்குடி பிரதான வீதியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் திகதி வவுணதீவு கொத்தியாபுல பகுதியில் இரவில் ஆயுதமேந்திய குழுவினரால் மேலும் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்குகளில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் சந்திரகாந்தன் சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »