வியட்நாமின் பு குவோக் தீவு அருகே இன்று (11) சுற்றுலாப் படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹோன் மே ரூட் பகுதியிலிருந்து அன் தோய் துறைமுகத்திற்கு 32 சுற்றுலாப் பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களுடன் சென்றுகொண்டிருந்த போதே இந்த அதிவேகப் படகு கவிழ்ந்தது.
ஹோன் மே ரூட் கோவாய் கடற்கரையிலிருந்து 400 மீட்டர் தொலைவில் படகு மூழ்கியதால், அதில் இருந்த அனைவரும் கடலில் தூக்கி வீசப்பட்டதாக வியட்நாமிய செய்தி இணையதளமான 'விஎன் எக்ஸ்பிரஸ் இன்டர்நேஷனல்' தெரிவித்துள்ளது.
படகு மூழ்கியபோது கடல் மிகவும் கொந்தளிப்பாக இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தேடல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதற்காகக் கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துள்ளதாகவும் ஹனோயில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
"வியட்நாமின் பு குவோக் தீவு அருகே பல இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்த துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது" என்று இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
தகவல் மற்றும் உதவி வழங்குவதற்காக ஹோ சி மின் நகரிலுள்ள இந்தியத் தூதரகத்திலும், ஹனோயிலுள்ள இந்தியத் தூதரகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
