Our Feeds


Saturday, July 11, 2026

SHAHNI RAMEES

சுயநலத்துக்காக தான், ரஞ்சன் ராமநாயக்க இந்த அரசாங்கத்திற்குச் சார்பாகப் பேசி வருகிறார்!

 


நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற

அசம்பாவிதங்கள் மற்றும் கைதிகளின் மரணங்கள் தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் ஊடகங்களுக்கு விசேட கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.


நீர்கொழும்பு சிறைச்சாலையில் முதல் நாள் அசம்பாவிதம் நடந்தபோதே, அதற்குப் பொறுப்பான அமைச்சர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உரிய மற்றும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். 


அவ்வாறு உரிய நேரத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், இரண்டாம் நாள் இத்தகைய பாரதூரமான பிரச்சினை ஏற்பட்டிருக்காது எனவும், அமைச்சரின் இந்த பொறுப்பற்ற தன்மை காரணமாகவே கைதிகள் மரணமடைய நேரிட்டதுடன், இது ஒரு திட்டமிடப்பட்ட படுகொலை போன்றதாகும் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.


இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தற்போதைய நீதி அமைச்சர் இவ்விடயத்தில் சரியாகச் செயல்பட்டுள்ளதாகக் கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்த மரிக்கார், தற்போதைய அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கோடே அவர் இவ்வாறு பேசி வருவதாகக் குறிப்பிட்டார். 



ரஞ்சன் ராமநாயக்கவிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அரைவாசி பொது மன்னிப்பே வழங்கப்பட்டதாகவும், தனக்கு முழுமையான மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளும் சுயநல நோக்கில் அவர் இந்த அரசாங்கத்திற்குச் சார்பாகப் பேசி வருகிறார் என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


மேலும், சிறைச்சாலை அதிகாரி ஒருவர் "மேலிடத்திலிருந்து உத்தரவு கிடைத்திருந்தால் இந்த அசம்பாவிதத்தைத் தடுத்திருக்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மரிக்கார், முதலாவது சம்பவத்திற்குப் பிறகாவது அதிகாரிகள் விழிப்படைந்திருக்க வேண்டும் என்றார். 


சிறைச்சாலையில் உள்ள 2,400 கைதிகளையும் ஒரே இடத்தில் வைத்திருந்தது பெரும் தவறாகும் எனக் குறிப்பிட்ட அவர், இந்த அசம்பாவிதங்களுடன் தொடர்புடைய 100 அல்லது 200 கைதிகளை உடனடியாக இரவோடிரவாக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றியிருந்தால் நிலைமை இவ்வளவு தூரம் மோசமடைந்திருக்காது எனவும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »