Our Feeds


Wednesday, July 8, 2026

Zameera

16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டை குறைக்கும் முன்னோடித் திட்டம் வெற்றி


 16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைப்பதற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முன்னோடித் திட்டம் வெற்றியளித்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 


பாராளுமன்றத்தில் இன்று (08) பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் குறிப்பிட்டார். 


அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 


"16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைப்பதற்காக தேசிய வழிகாட்டுதல் நெறிமுறையை தயாரித்தல் மற்றும் பிள்ளைகளின் மனநலனை மேம்படுத்தும் நோக்கில் Brain Health என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தேசிய மட்டத்திலான விழிப்புணர்வு கலந்துரையாடலொன்றை ஆரம்பித்தல். 


இதற்கமைய, தற்போது மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் மூலம் குடும்பங்களை வலுவூட்டும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னோடித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


இதன்மூலம் 18 வயதிற்குட்பட்ட பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களில் உள்ள, கையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையான பிள்ளைகளை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், இந்த முன்னோடித் திட்டங்களில் வெற்றிகரமான முடிவுகள் கிடைத்துள்ளதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது. 


இது அரசாங்கத்தின் முன்னுரிமையாகக் கருதி நாங்கள் தலையிடும் ஒரு விடயமாகும். இதனை ஒரேயொரு நடவடிக்கையின் மூலம் மட்டும் எம்மால் கட்டுப்படுத்தவோ அல்லது ஒழுங்குபடுத்தவோ முடியாது. 


சமூக ஊடகங்களைத் தடை செய்வது பற்றி மாத்திரம் நாங்கள் பேசவில்லை, பலதரப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசி வருகிறோம். கல்வியின் ஊடாகவும் மற்றும் பிற சந்தர்ப்பங்களிலும் சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் Digital Health குறித்து ஆலோசனைகளைப் பெற்று, எமது நாட்டிற்கு மிகவும் பொருத்தமான நடவடிக்கைகள் எவை என்பது குறித்து நாங்கள் கலந்துரையாடி வருகிறோம். இவற்றை இந்த வருடத்திற்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »