Our Feeds


Saturday, July 18, 2026

SHAHNI RAMEES

போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கி வந்த பெண் கைது!


10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய

237 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை வைத்திருந்த அங்கோலா நாட்டு பெண் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 


கைது செய்யப்பட்ட பெண் 54 வயதுடையவர் ஆவார். அவர் அங்கோலாவில் இருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரிற்கு வந்து, அங்கிருந்து கட்டாரின் தோஹா ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


விமானத்திலிருந்து இறங்கிய பின்னர் அவர் சக்கர நாற்காலியின் (Wheelchair) உதவியுடன் விமான நிலைய முனையத்தை நோக்கி பயணித்துள்ளதுடன், இதன்போது அவரது நடத்தை குறித்து சுங்க அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளனர். 


அங்கு நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, அவராகவே முன்வந்து தன்னிடம் இருந்த கொக்கேய்ன் போதைப்பொருள் அடங்கிய 14 மாத்திரைகளை (Capsules) சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். 


இதுதவிர, மேலும் சில போதைப்பொருள் மாத்திரைகளை தான் விழுங்கியுள்ளதாகவும் அந்தப் பெண் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் முன்னிலையில் ஒப்புக்கொண்டுள்ளார். 


இச்சம்பவம் குறித்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »