Our Feeds


Sunday, July 12, 2026

Admin

“டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி” முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுக்கும் கிழக்கு மாகாண டெங்கு ஒழிப்பு செயல் திட்டம்.



நேற்று (11) கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஆசாத் பிளாசா மண்டபத்தில், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில், “கிழக்கு மாகாண டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு செயற்றிட்டம்” தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.


“டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில், 2026 ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 09 வரை கிழக்கு மாகாணம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் நல செயற்றிட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விரிவான ஆலோசனைகள் இடம்பெற்றன. இதில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை அதிகாரிகளின் பங்களிப்புடன் டெங்கு கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் சுகாதாரம், மக்கள் விழிப்புணர்வு மற்றும் சமூகப் பங்களிப்பை வலுப்படுத்தும் செயற்பாடுகள் குறித்து ஆழமான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.


இந்நிகழ்வில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும், தேசிய பொருளாளரும், உயர்பீட உறுப்பினர்களும், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களும், கல்முனை பிராந்திய சுகாதார அதிகாரிகளும், பிரதேச அமைப்பாளர்களும், இளைஞர் அமைப்பாளர்களும், கட்சியின் முக்கியஸ்தர்களும் எனப் பலர் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.


கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயின் பரவலைக் கட்டுப்படுத்துவது அரசாங்கம் அல்லது சுகாதாரத் துறையின் பொறுப்பு மட்டுமல்லாது, ஒவ்வொரு குடிமகனின் சமூகப் பொறுப்புமாகும் என்பதும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. மக்களின் செயற்பாட்டு பங்களிப்புடன் சுற்றுப்புறங்களை சுத்தமாகப் பேணுதல், டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை முற்றிலுமாக ஒழித்தல் மற்றும் தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் “டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை” உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »