கடந்த 2016 ஆம் ஆண்டு கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.Geographic Reference
இந்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் இன்று (13) திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்குத் அறிவித்ததுடன், அது தொடர்பான மருத்துவ அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பிரதம நீதவான், வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் திகதி, அப்போதைய ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையாளர் இளவரசர் சைத் ராத் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
அந்த விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்திற்கு முன்பாக தும்முல்ல மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகளை மறித்துப் போராட்டம் நடத்தியதன் மூலம் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலும் இடையூறும் ஏற்படுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கினைக் கறுவாத்தோட்டம் பொலிஸார் தாக்கல் செய்திருந்தனர்.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு மேலதிகமாக இந்த வழக்கில் ஜெயந்த சமரவீர, வீரகுமார திசாநாயக்க,பியசிறி விஜேநாயக்க, ரொஜர் செனவிரத்ன, முஹமட் முஸம்மில் ஆகியோரின் பெயர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
