Our Feeds


Wednesday, July 8, 2026

Zameera

கேப்பாப்பிலவு மக்களை சந்திக்க பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு கோரிக்கை


 தமது பூர்வீக காணிவிடுவிப்பிற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர நேரில் சந்தித்துக் கலந்துரையாட வேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 16.07.2026ஆம் திகதியன்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ள சூழலிலேயே பாராளுமன்ற உறுப்பினரால் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றில் இன்று (08) உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள கேப்பாப்புலவு மக்கள் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கமாறு வலியுறுத்தி இன்றோடு 15ஆவது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 5ஆம் திகதி காணி விடுவிப்பை வலியுறுத்தி அந்த மக்களால் பாரிய ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்து.

குறிப்பாக கேப்பாப்பிலவில் 55 குடும்பங்களுக்குரிய 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகளும் 04 குடும்பங்களுக்குரிய 100 ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளுமாக மொத்தம் 59 குடும்பங்களுடைய 159.5 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கின்றனர்.

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள குறித்த பகுதிக்குள் பாடசாலை, பொதுநோக்கு மண்டபம், கோயில், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன. தென்னை, மா, பலா, பனை, வேம்பு உள்ளிட்ட பயன்தரு மரங்களும் காணப்படுகின்றன.

மக்களுடைய பெருமளவான கால்நடைகளை இராணுவத்தினர் அந்தப் பகுதிக்குள் அபகரித்து வைத்திருப்பதாகவும், பால் உற்பத்தியை பெறுவதாகவும் மக்களால் எம்மிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமது வளங்களைப் பயன்படுத்தி இராணுவத்தினர் இயற்கை உரம் தயாரித்து விற்பனை செய்வதுடன், நந்திக்கடல் வாழ்வாதார வளத்தினை பயன்படுத்திக்கொள்ள முடியாதவாறு இராணுவத்தினர் முடக்கிவைத்திருப்பதாகவும் மக்களால் எம்மிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16ஆம் திகதி பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைதரவுள்ளதாக அறிய முடிகின்றது. அவ்வாறு வருகை தருகின்ற பாதுகாப்பு பிரதி அமைச்சர் காணி விடுவிப்பை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களைச் சந்தித்துக் கலந்துரையாட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன். என குறிப்பிட்டுள்ளார்.

(விஜயரத்தினம் சரவணன்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »