ஏதேனும் வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக
நபரிடம் குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அழுத்தம் பிரயோகிக்கும் உரிமை நீதிமன்றத்துக்கு கிடையாது.விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் அமைதியாக இருக்கும் உரிமை சுரேஸ் சலேவுக்கு உண்டு. சுரேஸ் சலேவின் மடிக்கணினி மற்றும் தொலைபேசியில் உள்ள புலனாய்வு தகவல்களை வெளிப்படுத்துவது மிலேனியம் சிடி காட்டிக்கொடுப்புக்கு இணையானதாக அமையும். புலனாய்வுத் தகவல் வழங்குநர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சுரேஸ் சலேவுக்கு உண்டு என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.Geographic Reference
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஸ் சலே தொடர்பில் கோட்டை நீதிவான் பிறப்பித்துள்ள உத்தரவுகளை மதிக்கிறேன்.ஆனால் அந்த உத்தரவுகளுக்கு உடன்பட போவதில்லை.ஏதேனும் வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபரிடம் குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அழுத்தம் பிரயோகிக்கும் உரிமை நீதிமன்றத்துக்கு கிடையாது.
கொழும்பு கோட்டை நீதிவான் பிறப்பித்துள்ள உத்தரவுகளுக்கு எதிராக சுரேஸ் சலே தரப்பின் சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
குற்றவியல் தண்டனை சட்டக்கோவையின் பிரகாரம் சந்தேக நபருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடையாது. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் அமைதியாக இருப்பதற்கும் சந்தேக நபருக்கு உரிமை உள்ளது.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஸ் சலேவிடம் அவரது மடிக்கணினி மற்றும் தொலைபேசி ஆகியவற்றின் கடவுச்சொல்லை கேட்டு எவரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. ஆனால் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கத்தோலிக்க சபையின் ஊடக பேச்சாளர் சிறில் காமினி உட்பட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சுரேஸ் சலேவுக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளார்கள்.இது சட்டவிரோத செயற்பாடு.
சுரேஸ் சலேவுக்கு புலனாய்வுத் தகவல்களை வழங்கிய உளவாளிகளின் விபரங்கள் அவரது தொலைபேசி மற்றும் மடிக்கணினியில் இருக்க கூடும். தகவல் வழங்குநர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஓய்வுப்பெற்ற புலனாய்வு அதிகாரி என்ற அடிப்படையில் சுரேஸ் சலேவுக்கு உண்டு.
அரச மற்றும் இராணுவ புலனாய்வுத் தகவல்களை விசாரணைகளுக்கு வழங்கியதால் கடந்த காலங்களில் பல பாரதூரமான சம்பவங்கள் நாட்டில் இடம்பெற்றன.மிலேனியம் சிடி காட்டிக்கொடுப்பை இதற்கு சிறந்த உதாரணமாக குறிப்பிடலாம்.
2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதுருகிரிய பகுதியில் மிலேனியம் வீட்டுத்திட்ட தொகுதியில் இருந்த இரகசிய இராணுவ பாதுகாப்பு இல்லத்தை பொலிஸார் சுற்றிவளைத்து புலனாய்வு அதிகாரிகளை கைது செய்தனர். பிரதமரை கொலை செய்வதற்கு இராணுவ புலனாய்வுப் பிரிவு திட்டம் தீட்டுவதாக குறிப்பிட்டு நீதிமன்றக்கு 'பி' அறிக்கை ஊடாக பெயர் விபரங்களை சமர்ப்பித்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் விபரங்கள் அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டன.இதனைத் தொடர்ந்து புலனாய்வு அதிகாரிகள் உட்பட தகவல் வழங்குநர்கள் உள்ளடங்களாக 73 பேரை விடுதலைப் புலிகள் அமைப்பு படுகொலை செய்தது. இந்த காட்டிக் கொடுப்பினால் இலங்கையின் இராணுவ புலனாய்வு முழுமையாக பலவீனமடைந்தது.இந்த நான்கு காரணிகளால் சுரேஸ் சலே கடவுச்சொல்லை வழங்காமல் இருக்கலாம் என்றார்.
