Our Feeds


Sunday, July 26, 2026

ShortNews

இரண்டாவது ஆண்டு முடிவதற்குள் பாரிய மாற்றம் ஏற்படும் - ரணில்!


எதிர்க்கட்சிகளின் ஒன்றுகூடல் ஒரு ஆரம்பம் மட்டுமே. அரசாங்கத்தின் இரண்டாவது வருடம் நிறைவடைவதற்குள் பாரிய மாற்றத்தைக்காண முடியும் என தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, நாட்டில் நிலுவையுள்ள 11 இலட்சம் வழக்குகளைத் தீர்ப்பதற்காக தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு பாராளுமன்றத்திற்கு யோசனையொன்றை சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம்  யோசனை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.

கொழும்பு - 7 இல் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், அனைத்துக் கட்சிகளும் தற்பொழுது மட்டத்திற்கு இறங்கி அரசியல் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளன. இந்த ஒன்றுகூடல் ஒரு ஆரம்பம் மட்டுமே. இரண்டாவது வருடம் நிறைவடைவதற்குள் பாரிய மாற்றத்தைக் காணமுடியும்.

தற்பொழுது இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றுகூடியுள்ளன. அதுமட்டுமின்றி, நாளை திங்கட்கிழமை பௌத்த பிக்குகளின் பெரிய மாநாடொன்றும், புதன்கிழமை சட்டத்தரணிகள் மாநாடொன்றும் அழைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து அனைவரும் ஒருமித்த கருத்துடன் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்த முடிவுக்கு வர வேண்டும். நாட்டில் உள்ள 11 இலட்சம் வழக்குகளைத் தீர்ப்பதற்காக தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு பாராளுமன்றத்திற்கு யோசனையொன்றை எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாகவே எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒரே இடத்திற்கு வந்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயம். ஜனாதிபதி அநுரவின்  செயல்கள் காரணமாக அனைத்துச் சட்டத்தரணிகளிடமிருந்தும் ஒன்றிணையுமாறு பாரிய அழுத்தம் எமக்கு வந்துள்ளது.

அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சட்டத்தரணிகள் கூட தற்பொழுது ஒன்றிணைந்துள்ளனர். எவரும் எதிர்பாராத விதமாக எதிர்க்கட்சி ஒன்றுபட்டுள்ளது. மறுபுறம் அரசாங்கம் மகாநாயக்கத் தேரர்கள் மற்றும் பிக்குகளைப் பகைத்துக் கொண்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியின் பலம் மேலும் வலுவடைந்து செல்கிறதே தவிர வீழ்ச்சியடையவில்லை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »