Our Feeds


Thursday, August 6, 2026

ShortNews

இலங்கையின் பெரிய வெங்காயத் தேவையில் 10 வீதம் மட்டுமே உள்நாட்டு உற்பத்தி - வசந்த சமரசிங்க!


இலங்கையின் மொத்த பெரிய வெங்காயத் தேவையில் 10 வீதம் மட்டுமே உள்நாட்டு உற்பத்தியின் மூலம் பூர்த்தி செய்யப்படுவதாகவும், மீதமுள்ள 90 வீதம் இறக்குமதியை சார்ந்துள்ளதாகவும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் சமந்த எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வருடாந்த பெரிய வெங்காயத் தேவை சுமார் 275,000 மெற்றிக் தொன் வரை காணப்படுவதாகவும், 2025ஆம் ஆண்டில் உள்நாட்டு உற்பத்தியாக 31,389 மெற்றிக் தொன் மட்டுமே கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனால், நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய பெருமளவு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், உள்நாட்டில் பெரிய வெங்காய அறுவடை நடைபெறும் ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு விசேட பொருட்கள் வரி விதிக்கப்படுவதாகவும், தற்போது ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு 50 ரூபாய் வரி அறவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த விலையில் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதன் மூலம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க முடியும் என்றாலும், அது உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதிக்கும் என்பதால் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு வரி தொடர்ந்தும் பேணப்படுவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

அதேவேளை, 2026 ஆம் ஆண்டில் உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்தி 36,000 முதல் 40,000 மெற்றிக் தொன் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வருடாந்த இறக்குமதிகள்:

2020: 265,000 மெட்ரிக் தொன்
2021: 200,000 மெட்ரிக் தொன்
2023: 294,000 மெட்ரிக் தொன்
2024: 200,000 மெட்ரிக் தொன்
2025: 200,000 மெட்ரிக் தொன்
2026 ஜூன் வரை: 158,000 மெட்ரிக் தொன்

உள்நாட்டு உற்பத்தி

2019: 18,603 மெட்ரிக் தொன்
2020: 4,318 மெட்ரிக் தொன்
2021: 65,907 மெட்ரிக் தொன்
2022: 17,799 மெட்ரிக் தொன்
2023–2024: 8828 மெட்ரிக் தொன்
2025: 31,389 மெட்ரிக் தொன்

2026ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் அறுவடை - 36000 முதல் 40,000 மெட்ரிக் தொன் வரையாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »