Our Feeds


Monday, August 31, 2026

ShortNews

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக NPP-யின் லால் விஜேநாயக்க உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!


தேசிய மக்கள் சக்தியின் (NPP) நிறைவேற்றுக் குழு உறுப்பினரான லால் விஜேநாயக்க, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த அரசியலமைப்புத் திருத்தம் மக்களின் அங்கீகாரத்திற்காக பொதுவாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு அவர் உச்ச நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான நிலைப்பாட்டை வெறுமனே அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான போட்டியாக சித்தரிப்பது பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக விஜேநாயக்க அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இப்போராட்டம் நீதித்துறையின் சுயாதீனத்தைக் காப்பதற்கும், ஒழுக்கமான சமூகத்தில் வாழ்வதற்கான மக்களின் உரிமையைப் பாதுகாப்பதற்குமான போராட்டம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மக்கள் முன்னிலையில் உள்ள தெரிவு, ஒரு அரசியல் கட்சியைப் பாதுகாப்பதா என்பதல்ல. மாறாக, நீண்டகால அர்ப்பணிப்பு மற்றும் போராட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட, எதிர்கால தலைமுறையினருக்கு ஒழுக்கமான சமூகத்தில் ஒழுக்கமான குடிமக்களாக வாழும் உரிமையைப் பாதுகாப்பதா என்பதேயாகும்.”

தனது தனிப்பட்ட மனுவுக்கு மேலதிகமாக, ‘Lawyers for Democracy’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் ஸ்தாபக உறுப்பினருமான விஜேநாயக்க, அந்த அமைப்பின் ஊடாகவும் மற்றுமொரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அரசியலமைப்பின் 3ஆவது உறுப்புரையுடன் முரண்படுவதாகவும், எனவே அது பொதுவாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஏற்கனவே பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »