Our Feeds


Tuesday, August 25, 2026

ShortNews

24 பிரதிவாதிகள் மீதான உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு விரைவில்!


உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி வழங்கப்படுமென கொழும்பு சிறப்பு மேல்நீதிமன்ற ஆயம் நேற்று (24) அறிவித்திருக்கிறது.

இவ்வழக்கின் பிரதிவாதிகளின் வாய்மொழி வாதங்கள் நேற்று (24) மாலை 6.00 மணியளவில் நிறைவடைந்ததையடுத்து, இரு தரப்பினரின் எழுத்துபூர்வ வாதங்களையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 08ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொழும்பு சிறப்பு மூன்று மேல்நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க (தலைமை நீதிபதி), சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் நேற்று (24) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இத்தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

இவ்வழக்கின் முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சிய விசாரணை கடந்த 13ஆம் திகதி மாலையுடன் நிறைவடைந்தது.

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கு விசாரணையின்போது, பிரதிவாதிகளின் 10 வாக்குமூலங்களை சாட்சியங்களாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள், வாள்கள், துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட 2,076 வழக்கு பொருட்கள் அடையாளம் காணப்பட்டு சான்றுகளாகக் குறிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள், பெருமளவிலான டி.என்.ஏ அறிக்கைகள், மருத்துவ அறிக்கைகள் மற்றும் மரண பரிசோதனை அறிக்கைகளும் சான்றுகளாகக் குறிக்கப்பட்டுள்ளன.

நெளபர் மெளலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகவே ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சட்ட மா அதிபரால் 23,270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »