தனியார் தொழிற்சாலை ஒன்றினால் சுற்றாடலுக்கு வெளியிடப்பட்ட இரசாயனப் பொருள் காரணமாகவே கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களில் நீர் விநியோகத்தை இடைநிறுத்த நேரிட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நீரில் ஏதேனும் கழிவுகள் கலந்துள்ளனவா என்பதை உறுதிப்படுத்தும் வரை பாதுகாப்பு நடவடிக்கையாகவே இவ்வாறு அவசரமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டதாக அச்சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து இது தொடர்பாகப் பரந்த அளவிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட தலைவர், எதிர்காலத்தில் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் பொறுப்பான நிறுவனங்களுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
