பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவு மற்றும் பானங்களுக்கான செலவினங்கள் 48 சதவீதத்தால் அதிகரித்துள்ளபோதிலும், அரசாங்கமும் அதனுடன் தொடர்புடைய அமைச்சர்களும் எந்தவித பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பாராளுமன்றத்தின் உணவு மற்றும் பானங்களுக்கான செலவுகள் குறித்து பல செய்திகள் வெளியாகியிருந்தன.
2025ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கையின்படி, உணவு மற்றும் பானங்களுக்கான செலவு 48 சதவீதத்தால் அதிகரித்து, 24.7 கோடி ரூபாயைக் கடந்துள்ளது
இதில் குடிநீர் போத்தல்களுக்காக மட்டும் சுமார் 2 இலட்சம் ரூபா வரை செலவிடப்பட்டுள்ளது. தினசரி உணவு உட்கொள்பவர்களின் எண்ணிக்கை 1,200 வரை உயர்ந்துள்ளதுடன், விருந்தினர்களுக்கான உணவுச் செலவு 109 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தியினர் பாராளுமன்ற உணவகத்தின் செலவுகள் குறித்து கடுமையாகப் பேசி வந்தனர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாராளுமன்ற உணவகத்தை மூடிவிட்டு, வீட்டிலிருந்தே உணவுப் பொட்டலங்களைக் கொண்டுவந்து உட்கொள்வோம் என்றும் மக்கள் பணத்தைச் சேமிப்போம் என்றும் கூறினார்கள். ஆனால் இன்று அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது 24.7 கோடி ரூபாவை பாராளுமன்ற உணவுக்காகச் செலவிட்டிருப்பது எந்த வகையில் நியாயமாகும்?
கடந்த கால அரசாங்கங்கள் மக்களின் வரிப்பணத்தை வீணடித்ததாகக் குற்றம் சாட்டிய இந்த அரசாங்கம், இன்று முந்தைய காலங்களை விட இரு மடங்குக்கும் அதிகமாக உணவுக்காகச் செலவிட்டுள்ளது. இதற்கு அரசாங்கத்தினால் முறையான பதில் அளிக்க முடியாது என்பதனாலேயே அமைச்சர்கள் அனைவரும் முற்றிலும் மௌனம் காத்து வருகின்றனர்.
22ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தின்போதும், தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் எதிர்க்கட்சித் தலைவர் முறையான கலந்தாலோசனைகளை நடத்தி அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துச் செயற்பட்டு வருகின்றார்.அரசியல் செய்திகள் மற்றும் தகவல்களைப் பின்பற்றுவது
நாமல் ராஜபக்ஷ கூட சஜித் பிரேமதாசவை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொண்டு, அவர் அழைக்கும் கூட்டங்களில் பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளார். எனவே எதிர்க்கட்சிக்குள்ளோ அல்லது எதிர்க்கட்சித் தலைவரின் தலைமைத்துவத்திலோ எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.
