Our Feeds


Saturday, August 22, 2026

Zameera

இலங்கையில் 4 இலட்சம் வேலைவாய்ப்புகள் வெற்றிடம் - அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி


 (செ.கவிஷனா)இலங்கை பொருளாதாரம்


இலங்கையின் தொழிற் துறையில் சுமார் 400,000 வேலைவாய்ப்புகள் காலியாக உள்ள போதிலும், நாட்டின் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தொடர்வதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.


கொழும்பில் வியாழக்கிழமை (20) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,


நாட்டின் பொருளாதாரம் ஒரு முரண்பாடான சூழலை எதிர்கொண்டுள்ளது. அதாவது, தொழிற்துறைகளில் கடுமையான திறன் பற்றாக்குறை நிலவுவதோடு, ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இருப்பினும், தகுதியான தொழிலாளர்களைக் கண்டறிவதில் தொழிற்துறைத் தலைவர்கள் பெரும் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 3.7 சதவீதமாகப் பதிவாகியுள்ளதுடன், தொழிலாளர் சக்தி பங்கேற்பு விகிதம் 49.2 சதவீதமாகக் காணப்படுகிறது. இது கடந்த ஆண்டின் காலாண்டுடன் ஒப்பிடும்போது தொழிலாளர் சக்தி பங்கேற்பில் மெதுவான வளர்ச்சியைக் காட்டுகிறது.



தொழிற்சாலைகளும் சேவை வழங்கல் நிறுவனங்களும் தமக்குத் தேவையான ஊழியர்களைக் கண்டறிவதில் சிரமங்களை எதிர்கொள்வதற்கு, வேலைச் சந்தையில் உள்ள வேலை தேவையுடையோரின் திறன்களுக்கும், தொழிற்துறையின் உண்மையான தேவைகளுக்கும் இடையே நிலவும் பாரிய இடைவெளியே முக்கிய காரணமாகும். அதாவது, தற்போது வேலையில்லாமல் இருக்கும் நபர்களிடம் குறிப்பிட்ட அந்த வேலைகளுக்குத் தேவையான தொழிற்தகைமைகளும் தொழில்நுட்ப நிபுணத்துவமும் இல்லை என்பதே யதார்த்தமாகும். இந்தச் சவாலை எதிர்கொள்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களை எளிதில் வரவழைப்பதில் அரசாங்கம் தயக்கம் காட்டுகிறது. இலங்கையின் தேவைகள் முதலில் நாட்டிற்குள்ளேயே பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஏனெனில், வெளிநாடு செல்பவர்கள் அதே விகிதத்தில் மீண்டும் நாடு திரும்புவதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.


இந்தத் திறன் இடைவெளியை முற்றிலுமாகக் குறைக்கும் பொருட்டு, தொழிற்பயிற்சித் துறை மற்றும் பல்கலைக்கழகங்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. பயிற்சி வழங்குநர்கள் எப்போதுமான வழக்கமான பாடநெறிகளை வழங்குவதை விடுத்து, தொழிற்துறையின் குறிப்பிட்ட மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்ப பயிற்சித் திட்டங்களையும் பாடத்திட்டங்களையும் மறுசீரமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான முறையான பயிற்சிகள் மூலம் உள்நாட்டு உற்பத்தியும் உற்பத்தித்திறனும் வலுப்பெறுவதுடன், தொழிற்துறை வளர்ச்சிக்கு வலுவான ஆதரவு கிடைக்கும் என்பதே அரசின் பிரதான நோக்கமாகும் என அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »