Our Feeds


Saturday, August 22, 2026

Zameera

என்னால் வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் ஜேவிபியின் பெலவத்தை காரியாலயத்துக்கு அனுப்பப்படும் : நாமல் ராஜபக்ஷ


 (க.சிவலிங்கமூர்த்தி)


என்னால் வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் பொலிஸ் மா அதிபர் ஊடாக பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு, அடுத்ததாக நான் எப்போது வர வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.


தங்காலையில் விடுதி தொடர்பாக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் வெள்ளிக்கிழமை (21) ஆஜராகி பல மணி நேர விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


இந்நாட்டிலுள்ள ஹோட்டல்களில் பாதியும் பல கட்டிடங்களும் என்னுடையது எனக் கூறுவதைக் கேட்கும்போது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே ஏற்படுகிறது. நபர் ஒருவர் தங்காலையில் வாங்கிய விடுதியை எவ்வாறு பெற்றார் என்று விளக்க முடியாமல் போகும்போது, அதனை நாமல் ராஜபக்ஷவுடையது எனக் கூறித் தப்பிக்க பார்க்கிறார். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும்கூட அப்போதைய ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் துபாய் மெரியட், வெலிகம ஹோட்டல் உள்ளிட்ட பல சொத்துக்கள் என்னுடையவை எனப் பிரச்சாரம் செய்தார். அன்று ஊழல் ஒழிப்புக்குழுவில் இருந்தவர்களே இன்று ஆட்சியில் இருக்கிறார்கள். அன்று அவர்கள் தாங்களாகவே புனைந்து கூறிய பொய்களுக்கு இன்று சட்டப்பூர்வமான தன்மையைக் கொடுக்க முயல்கிறார்கள். எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வந்து ஒத்துழைப்பு வழங்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.



அவ்வாறு கூறப்படும் ஹோட்டல் மற்றும் கொழும்பு 07 இல் உள்ள வீடு ஆகியவை என்னுடையவை என்றால், பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதிப் பிரச்சினை இருப்பதால் அந்த இடத்தை அவர்களுக்கு வழங்க முடியும். அரசாங்கம் தனது அரசியல் தேவைகளுக்காகவும் பழிவாங்கும் நோக்கத்துக்காகவும் மக்கள் பணத்தை வீணடித்து இவ்வாறான நிறுவனங்களைப் பயன்படுத்தி வருகிறது. விசாரணைக்கு வருமாறு அழைக்கும் போதெல்லாம் நாம் வருகிறோம்; ஏனெனில் நாம் எந்தத் தவறும் செய்யவில்லை. அரசாங்கம் பொய் சாட்சிகளை உருவாக்கி நீதித்துறைக்கு அழுத்தங்களைக் கொடுக்க முயற்சித்தால், அதற்கு நாம் பயப்படப்போவதில்லை. நாட்டில் சுயாதீனமான நீதித்துறை இயங்க வேண்டும் என்பதிலும், மதிப்பிற்குரிய நீதிபதிகள் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.


பெலவத்தை அலுவலகத்திலிருந்து அறிவித்தல் வரும்போது மீண்டும் விசாரணைக்கு வருவேன். அரசாங்கம் மிகவும் பதற்றமடைந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. இந்த பதற்றத்தை வைத்துக்கொண்டு அரசாங்கம் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். என்னை அடிக்கடி இங்கு அழைப்பதால் எதுவும் ஆகப்போவதில்லை, நான் எதற்கும் அஞ்சப்போவதும் இல்லை.


என்னுடைய சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்து விசாரணைகள் நடக்கும்போது, ஆளுங்கட்சியினர் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை எண்ணி மகிழ்கிறேன். அதேநேரம், சிலர் தங்களது சட்டவிரோதச் சொத்துக்களையும், அநியாயமாகச் சம்பாதித்த பணத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக மற்றவர்களின் பெயர்களைப் பயன்படுத்திப் பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது குறித்து கவலையடைகிறேன். இவ்வாறான செயல்களால் இந்நாட்டு மக்களுக்கு எந்தவொரு நியாயமும் கிடைக்கப் போவதில்லை என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »