Our Feeds


Thursday, August 6, 2026

Zameera

சிறைகளும் குற்றவாளிகளும் அற்ற முன்மாதிரி நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு


 சிறைச்சாலைகளோ அல்லது குற்றவாளிகளோ இல்லாத ஒரு முன்மாதிரியான நாட்டை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பு என்றும், அதற்கான முறையான வேலைத்திட்டங்கள் தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.



நாடாளுமன்றத்தில் நேற்று (04) உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:


மீனவர் வாழ்வாதாரம் மீட்பு


“நாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் போது இந்த நாடு பாரிய வங்குரோத்து நிலையில் காணப்பட்டது.


குறிப்பாக மீனவர்கள் கடற்றொழிலுக்குச் செல்ல முடியாதவாறு பல நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தனர்.


ஆனால், நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் பல்வேறு நிவாரணங்களை வழங்கினோம்.


இதன் விளைவாக, தற்பொழுது கடற்றொழில் துறை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.


பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு உதவி


தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மலையகப் பகுதிகள் மீண்டும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.


நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களை இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.


பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. அம்மக்களுக்குத் தேவையான அனைத்து நிவாரணங்களையும் உதவிகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும்.


ஊழலுக்கு எதிரான சட்ட நடவடிக்கை


ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே மக்கள் எமக்கு இந்த ஆணையை வழங்கினார்கள்.



மக்களின் அந்த எதிர்பார்ப்பிற்கு அமைய, ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் சட்டப்பூர்வமான வழியில் உறுதியாக முன்னெடுக்கப்படும்.


குற்றங்களற்ற சமூகம்


எமது ஆட்சியில் சிறைச்சாலைகளோ அல்லது குற்றவாளிகளோ இல்லாத நிலையை உருவாக்குவதே எமது பிரதான இலக்காகும்.


நாமும் சிறைவாசம் அனுபவித்தவர்கள் என்பதால், சிறையில் இருப்பதன் வேதனையும் வலியும் எமக்கும் நன்றாகவே தெரியும்.


எனவே, நாட்டில் குற்றச் செயல்கள் முற்றாக இல்லாத சூழலை உருவாக்குவோம்” என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »