கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சையை இனவாத மோதலாக மாற்ற வேண்டாம் என சம உரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் ஹிஜாபுடன் சீருடைக்கு கீழ் நீளக் கால்சட்டை அணிந்து பணிக்கு வந்தமை தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து குறித்த ஒன்பது ஊழியர்களையும் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்துள்ளமை பிரச்சினைக்கு தீர்வாகாது எனவும், இதனால் இனவாத பதற்றம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் சம உரிமை இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சீருடை தொடர்பான இறுதி தீர்மானங்கள் தேசிய மட்டத்தில் உரிய நடைமுறைகளின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள இயக்கம், அனைத்து சமூகங்களினதும் மத மற்றும் கலாச்சார உரிமைகளை கருத்திற்கொண்டு இவ்விவகாரத்திற்கு நியாயமான தீர்வை வழங்குமாறும் கோரியுள்ளது.
