அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் பின்னணியிலுள்ள அரசியல் நோக்கம் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இராணுவ வீரர்களின் நினைவேந்தலின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலையான போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,''தற்போதைய ஆட்சிப்பீடம் தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அரசியலமைப்புச் சட்டங்களைச் சாதகமாகப் பயன்படுத்துவதாகவும், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக, விவசாயிகளின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் தேர்தல் நடத்தப்படாமை போன்ற விடயங்கள் மக்களிடையே அரசாங்கத்தின் செல்வாக்கை சரித்துள்ளது.
வெறும் சட்ட அமுலாக்க அதிகாரங்களைக் கொண்டு மாத்திரம் ஒரு நாட்டை நீண்டகாலம் ஆள முடியாது. மக்களின் அபிலாஷைகளை மதிக்காத எந்தவொரு ஆட்சியும் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, வயதானவர்கள் நாட்டை அழிக்கிறார்கள் என்றும் முதியவர்களுக்கு வீட்டில் கூட இடம் தரக்கூடாது என்றும் கூறியது. ஆனால் இன்று, வயது கூடும்போதுதான் முதிர்ச்சியும் செயல்திறனும் அதிகரிக்கும் என்று திடீரெனக் கூறத் தொடங்கியுள்ளது.
நீதிமன்றங்களில் சாதாரண மக்கள் அலைக்கழிக்கப்படுவதைத் தடுப்பதற்காக அல்லாமல், ஒரு குறிப்பிட்ட தனிநபரை (உயர் நீதிமன்ற நீதிபதியை) பதவியில் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்துடனேயே ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு பொதுஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தும் எண்ணமோ அல்லது அதற்கான திறமையோ இல்லை. அவர்களுக்கு அத்தகைய தைரியம் இருந்தால், முதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும்.''என தெரிவித்தார்.
Tuesday, August 25, 2026
மக்களிடையே அரசின் செல்வாக்கு குறைந்துள்ளது - விமல்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
