Our Feeds


Tuesday, August 25, 2026

ShortNews

நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் - நாமல் அழைப்பு!


அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லும் தீர்மானத்தை உயர்நீதிமன்றம் அறிவிக்காது என்று நீதியமைச்சரால் எவ்வாறு குறிப்பிட முடியும். நீதித்துறையையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அரசாங்கம் முயற்சிக்கிறது. நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில்  திங்கட்கிழமை (24) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாங்கள் கிராமத்துக்கு கிராமம் சென்று மக்களுடன் கலந்துரையாடுகிறோம். மக்கள் தங்களின் பிரச்சினைகளை எம்முடன் குறிப்பிடுகிறார்கள். அவற்றை நாங்கள் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துகிறோம்.

எதிர்க்கட்சிகள்  கிராமத்துக்கு கிராமமாக சென்று அரசியல் கூட்டங்களை நடத்துகின்ற நிலையில் எதிர்வரும் மாதம் 05 ஆம் திகதி முதல் மாவட்ட மட்டத்தில் ஜனாதிபதி  பொது கூட்டங்களை நடத்துவதாக குறிப்பிடப்படுகிறது.இதுவும் சிறந்ததே ஜனாதிபதி மக்கள் மத்தியில் செல்ல வேண்டும் அப்போது தான் பல பிரச்சினைகள் பற்றி தெரியவரும்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு மக்கள் வாக்கெடுப்புக்கு செல்லும் தீர்மானத்தை உயர்நீதிமன்றம் அறிவிக்காது என்று நீதியமைச்சர் குறிப்பிடுகிறார்.

நீதிமன்றம்  தீர்ப்பளிப்பதற்கு முன்னர் நீதியமைச்சர் எவ்வாறு உறுதியாக மக்கள் வாக்கெடுப்புக்குச் செல்லும் தீர்மானத்தை நீதிமன்றம் அறிவிக்காது என்று குறிப்பிட முடியும். இந்த 22 ஆம் திருத்தம் ஊடாக அரசாங்கம் நீதித்துறையை கைப்பற்ற முயற்சிக்கிறது.

நாட்டு மக்களுக்காகவே எதிர்க்கட்சிகள் அனைத்தும் இன்று ஒன்றிணைந்துள்ளன. நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »