Our Feeds


Tuesday, August 25, 2026

ShortNews

நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாக்க மக்கள் தீர்ப்பு அவசியம் - சாலிய பீரிஸ்!


நீதித்துறையின் சுதந்திரத்தை சீர்குலைக்கும் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தமும் மக்களின் இறையாண்மையைப் பாதிக்கும் என்பதால், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை போதுமானதல்ல. பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (25) ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஒரு கருத்தை முன்வைத்தார் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதால் நீதித்துறையின் சுதந்திரம் எவ்வாறு பாதிக்கப்படும் என்று, அதாவது ஒரு நீதிபதி நடுநிலையுடனும், சுயாதீனமாகவும் செயல்பட வேண்டுமெனின் அவரது பதவிக் காலமும், ஓய்வுப்பெறும் வயதும் முன்பே தீர்மானிக்கப்பட்டதாகவும், அரசியல் தலையீடுகளுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்க வேண்டும். ஓய்வுபெறும் தருவாயில் உள்ள நீதிபதிகளை இலக்கு வைத்து அல்லது அரசாங்கத்திற்கு சாதகமாக பதவிக் காலத்தை நீடிக்கும் நடைமுறை உருவானால் அது நீதிமன்றத்தின் மீதான பொதுமக்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும் செயற்படாகும். ஒருவேளை ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டாலும் அது தற்போது பணியில் இருக்கும் நீதிபதிகளுக்கு பொருத்தமற்ற வகையிலும், இனி புதிதாக நியமிக்கப்படும் நீதிபதிகளுக்கு மட்டுமே பொருந்தும் வகையிலும் அமுல்படுத்தப்பட வேண்டும்.

மேலும், அந்த திருத்தத்தைக் கொண்டுவருவதில் அரசாங்கம் காட்டும் அவசரம் குறித்து பல கேள்விகள் எழுகின்றன. நடப்பு ஆண்டில் பல மூத்த நீதிபதிகள் ஓய்வுபெற்றபோது எடுக்கப்படாத இந்த நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் தலைமை நீதிபதி ஓய்வுபெற உள்ள நிலையில் அவசரமாக முன்வைக்கப்படுவது பொதுமக்களிடையே பல சந்தேகங்கள் எழுப்பியுள்ளது. இத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால் முதன்மையாக தற்போதைய தலைமை நிதிபதியின் பதவிக் காலமே நீடிக்கப்படும் என்பதால் இதன் பின்னணியில் உள்ள நகர்வுகள் தெளிவாக விளங்குகின்றன.

அத்துடன், அரசாங்கத்தரப்பினர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது இத்திருத்தங்களை எதிர்ப்பவர்கள் தனிப்பட்ட காரணங்களினால் குறிப்பிட்ட சலுகைகளைப் பாதுகாப்பதே அவர்களின் நோக்கம் என்று குற்றம் சாட்டினார்கள். குறித்த விவாதத்தை சலுகைகளுக்கான போராட்டமாக அல்லது ஒரு தரப்பினரின் போராட்டமாகவோ கருதக்கூடாது. நாட்டின் ஆட்சியையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாதுகாப்பது மட்டுமே தங்களின் ஒரே நோக்கம். நீதிமன்றங்களின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை எக்காலத்திலும் பாதுகாக்கப்பட்டதாக வேண்டும்.

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியில் இருக்கும் போது நீதித்துறையின் சுதந்திரம் குறித்து பேசுவதும் அதிகாரத்துக்கு வந்தவுடன் அதனை மறந்து செயல்படுவதும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் சட்டத்தரணிகள் அவ்வாறு இல்லை. நாம் எந்த ஆட்சிக்காலத்திலும் ஒரே நிலையான கொள்கையில் உறுதியாக காணப்படுவோம்.

கடந்த 2022 ஆம் ஆண்டு அரகல போராட்ட காலங்களில் போராட்டக்காரர்களின் உரிமைக்காகவும், கைது செய்யப்பட்டவர்களுக்காவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்னின்றமை நினைவில் இருக்கும். அன்று அவர்களுடன் இணைந்து செயல்பட்ட இன்றை அரசியல் தலைவர்கள் அதிகாரத்துக்கு வந்த சட்டத்தரணிகள் சங்கம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து முத்திரை குத்துவது பெரும் முரண்பாடாக உள்ளது. அரசியலமைப்பு சட்டமானது தனிநபர்களின் நலன்களுக்காக திருத்தப்படக் கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதுடன் தற்போதைய ஜனாதிபதி கொள்கை ரீதியாக அதனை அறிவார்.

அரசியலமைப்பு திருத்ததுக்கு மக்கள் தீர்ப்பு தேவையில்லை என்றும், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையே போதுமானது என்று அரச தரப்பினர் வாதாடுகிறது. ஆனால் இலங்கை அரசியலமைப்பின்படி நீதித்துறை அதிகாரம் என்பது நாட்டின் இறையாண்மையுள்ள மக்களின் முதன்மை அதிகாரத்தின் ஒரு பகுதியாகும். எனவே நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் எந்தவொரு திருத்தமும் மக்களின் அதிகாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் எனின் அதற்கு பாராளுமன்ற பெருபான்மை மட்டும் தீர்வாக அமையாது, கட்டாயம் மக்கள் தீர்ப்பும் பெற வேண்டும்.

அதேவேளை, தாங்கள் எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடாததால் நீதித்துறை சுதந்திரம் என்பது தங்களுக்குத் தேவையில்லை என சாதாரண பொதுமக்கள் நினைக்கக்கூடும். ஆனால், தங்களின் அன்றாட உரிமைகள் பாதிக்கப்படும்போது தான் நீதித்துறை சுதந்திரத்தின் உண்மையான அவசியம் அவர்களுக்கு உணர்வாகும். உதாரணமாக, அரசு நடத்தும் பொதுத்தேர்வுகளில் ஏதேனும் அநீதியோ அல்லது முறைகேடுகளோ நடந்தால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் நீதிமன்றத்தை நாடும்போது, அவர்களுக்குச் சாதகமான மற்றும் நடுநிலையான தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை சுதந்திரமான நீதித்துறையால் மட்டுமே சாத்தியமாகும்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் நீதித்துறை சுதந்திரத்திற்கான சிறப்பு பிரதிநிதி உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள் இத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளன. எதிர்க்கட்சிகளோ அல்லது சட்டத்தரணிகள் சங்கமோ தவறான தகவல்களைக் கூறியதால் மட்டுமே ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகள் அறிக்கைகள் வெளிவிடாது. சர்வதேச அமைப்புகளை எதிர்க்கட்சி தவறாக வழிநடத்துகிறது என்ற அரசின் குற்றச்சாட்டு தவறானது. பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்காமல் அவசர அவசரமாகவும் இரகசியமாகவும் இந்த சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர அரசு முயல்வது ஏன் என மக்கள் சிந்திக்க வேண்டும். நீதிமன்றத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இதுதான் தீர்வு என்று நம்பி இத்திருத்தத்தை நிறைவேற்றினால், அதன் பின்னணியில் உள்ள பேராபத்தை நாடு அனுபவிக்க நேரிடும். யாரோ சிலர் அரசாங்கத்திற்குத் தவறான ஆலோசனைகளை வழங்கி தவறாக வழிநடத்துகிறார்கள் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »