Our Feeds


Wednesday, August 12, 2026

Zameera

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை : தீர்வு காண புதிய முயற்சி


 கிளிநொச்சி மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (11) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.




இதன்போது, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் இந்திய இழுவைப் படகுகளின் சட்டவிரோத அத்துமீறல்களால் தமது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவ சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.




இதற்குப் பதிலளித்த அமைச்சர், தடை செய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், இலங்கை – இந்திய மீனவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இந்திய தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.




“பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க நாம் தயாராக உள்ளோம். செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன” என அமைச்சர் தெரிவித்தார்.




அத்துடன், கிளிநொச்சி மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மீன்பிடி இறங்குதுறைகளை ஆழப்படுத்துதல், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.




மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, கடற்றொழில் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »