பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை மு.கா.
உறுப்பினரின் பிள்ளை கடத்தப்பட்டதா? - அஸீஸ் சொல்வது என்ன?பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கூட்டணி - தராசு சின்னம் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்) உறுப்பினர் ஏ.அஸீஸின் பிள்ளை கடத்தப்பட்டதாக ஊரில் திடீரெனப் பரவிய பரபரப்பான செய்தி குறித்து அவரிடம் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு விபரங்களைக் கேட்டறிந்தேன்.
பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபையில் புதிய தவிசாளர் தெரிவு இன்று நடைபெற இருந்த நிலையில்தான் இச்சம்பவம் இடம்பெற்றதாகத் தகவல்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அஸீஸ் தலாத்துஓயாவுக்கு இன்று காலை சென்றிருந்தார். இதற்கிடையில், சபைக்குச் சென்றிருந்தபோது தெரியாத இலக்கமொன்றிலிருந்து அழைப்பு வந்துள்ளது. "உங்கள் பிள்ளை பாடசாலைக்குச் சென்றதா" என அதில் கூறப்பட்டதையடுத்து அழைப்பு துண்டிக்கப்பட்டதால் பதற்றமடைந்த அவர், உடனடியாக வீட்டில் இருந்த மனைவியைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். "பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்றுவிட்டனர்" என மனைவி கூறினார். பிள்ளைகள் பாடசாலையில் இருக்கின்றனரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரிடம், அஸீஸ் உதவி கோரியுள்ளார். பாடசாலைக்குள் பிள்ளைகள் செல்லவில்லை என்பதை உடனே உறுதி செய்யப்பட்டது. எனினும், பிள்ளை மீண்டும் வீட்டுக்கு வந்துவிட்டது. எனினும், "தான் வீட்டுக்குச் சென்று என்ன நடந்தது என பிள்ளைகளிடம் பேசிவிட்டு நிலைமை பற்றித் தெரிவிக்கிறேன்" என அஸீஸ் என்னிடம் கூறியிருந்தார்.
வீட்டுக்குச் சென்ற பின்னர் பிரதேச சபை உறுப்பினர் அஸீஸை நான் மீண்டும் தொடர்புகொண்டு வினவினேன். பிள்ளை பாடசாலைக்குச் செல்லத் தாமதமாகிவிட்டது. இதனால் பாடசாலை சென்ற பிள்ளை வீதியில் அழுதுகொண்டே சென்றுகொண்டிருந்ததைப் பார்த்த எனது நண்பரும் உறவினருமான ஒருவர், அக்கறையின் காரணமாகப் பிள்ளையைப் எனது வீட்டுக்கே அழைத்துச் சென்றுள்ளார். எனவே, பிள்ளை கடத்தப்படவுமில்லை, அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவுமில்லை என பிரதேச சபை உறுப்பினர் அஸீஸ் கூறினார்.
மக்களுக்கும் விபரத்தை புரிய வைப்பதற்காகவே இந்த பதிவாகும்.
சம்பவத்தின் பின்னணி மற்றைய விபரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கலாம்..
