Our Feeds


Saturday, August 22, 2026

Zameera

முஸ்லிம் பெண்களின் சீருடை விவகாரத்தில் சுகாதார அமைச்சர் குழப்பமடைந்தார் – ரவூப் ஹக்கீம்


 (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கேற்றல்


சுகாதார உதவியாளர்களாக நியமனம் பெற்றுள்ள முஸ்லிம் பெண்களின் சீருடை தொடர்பான விடயத்தில் ஆரம்பத்தில் தீர்வுகளை முன்வைப்பதை போன்று கருத்துக்களை தெரிவித்த சுகாதார அமைச்சர், பின்னர் சற்று குழப்பமடைந்து எதிர்க்கட்சியின் மீது குற்றம் சுமத்தும் வகையில் கருத்துக்களை முன்வைத்தார் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.  


பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குறைநிரப்பு மதிப்பீடு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,


சுகாதார துறையில் தாதி உதவியாளர்களின் சீருடை தொடர்பான பிரச்சினை தொடர்பில் எம்.பிக்கள் பலர் கேட்ட போது அதற்கு அமைச்சர் செவிசாய்த்தார். அவர் இதற்கான முறைமையொன்றை பயன்படுத்த முயற்சிப்பதாக கூறினாலும், வியாழக்கிழமை (20) அவர் பேசும் போது சற்று குழப்பத்தில் இருந்ததை போன்று தெரிந்தது. மின்னல் தாக்கும் போது இரும்புத் துண்டை வெளியில் வீசுவது போன்று எப்போதும் எதிர்க்கட்சி மீது குற்றஞ்சாட்டுவதற்கு அவர் முயற்சித்தார். 


இங்கு வைத்தியர் நிஹால் அபேசிங்க இருக்கிறார். சுகாதார அமைச்சின் துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் இந்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடலை அவருக்கு ஆரம்பிக்க முடியும்.


குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு தமது மத கலாசாரங்களுக்கமைய சுகாதார அமைச்சின் சீருடையில் சுகாதார துறையில் உள்ள தேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றங்கள் செய்வது தொடர்பில் கலந்துரையாட அவருக்கு முடியும். அதனால் வைத்தியர் நிஹால் அபேசிங்க அந்த பணியை செய்வார் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »