(மனோகரன் பிரியங்கா)
நாட்டின் பல கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை காணப்படக்கூடும் என்பதால், கடற்படை மற்றும் மீன்பிடி சமூகத்தினர் விழிப்புடன் இருக்குமாறு இயற்கை இடர் முன்னெச்சரிக்கை மையம் அம்பர் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (22) காலை 10:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு, ஞாயிற்றுக்கிழமை (23) காலை 10:30 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையிலான கடல் பகுதிகளிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளிலும் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் அலைகளின் உயரம் 2.0 முதல் 2.5 மீட்டர் வரை உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.உள்ளூர் நகர வழிகாட்டிகளை ஆராய்தல்
எனவே, இந்த எல்லைக்குட்பட்ட கடல் பகுதிகளில் பயணிக்கும் கடற்படையினரும் மீன்பிடிச் சமூகத்தினரும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
