Our Feeds


Thursday, August 20, 2026

ShortNews

கல்முனை ஆதார வைத்தியசாலை அதிகாரிகளின் இடமாற்றத்திற்கு நிரந்தர தீர்வே தேவை - நிசாம் காரியப்பர்!


கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட சுகாதார அதிகாரிகளின் இடமாற்றம் தற்காலிகமாக இருந்தாலும் இதற்கு நிரந்தர தீர்வு ஒன்றை அரசாங்கம் விரைவில் மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) சபை ஒத்திவைப்பு வேளை கேள்வியின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் பின்வரும் கேள்விகளையும் சுகாதார அமைச்சருக்கு முன் வைத்தார்.

ஒரு பொது நிறுவனத்தில், குறிப்பாக சுகாதார நிறுவனமொன்றில் பணியாற்றும் ஒருவர், தனது மத நம்பிக்கைகள் அல்லது கலாசார அடையாளத்தின் அடிப்படையில் ஆடை அணிவது, (அந்த ஆடை குறித்த சேவைக்காக நிர்ணயிக்கப்பட்ட சீருடையின் நியாயமான நோக்கம் அல்லது தேவைகளுடன் முரண்படாத வரையில்) அனுமதிக்கப்படலாம் என்பது அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறதா?

அவ்வாறாயின், 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமை புரியும் சில அதிகாரிகள், மத அல்லது கலாசார அடையாளத்தின் அடிப்படையில் அணிந்திருந்த ஆடை காரணமாக புதிதாக நியமித்த சில சுகாதாரப் உதவி பணியாளர்களை கடமைக்கு சமூகமளிப்பதைத் தடுத்த வகையில் செயற்பட்டுள்ளனர் என்பதை அமைச்சர் அறிந்திருக்கிறாரா?

மேலும், சுகாதாரத் துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்குப் பொருந்தக்கூடிய ஆடை மற்றும் சீருடைகள் தொடர்பாக பொது நிர்வாக அமைச்சினால் 29.06.2019 அன்று வெளியிடப்பட்ட EST-7/UNIFO/06/V இலக்க சுற்றறிக்கையின் விதிமுறைகளுக்கு இத்தகைய நடவடிக்கை முரணானது என்பதை அமைச்சர் அறிந்திருக்கிறாரா?

அவ்வாறாயின், மேற்படி சுற்றறிக்கைக்கு முரணாகச் செயற்பட்ட அல்லது இத்தகைய ஆடையின் காரணமாக சுகாதாரப் உதவி பணியாளர்களை கடமைக்கு சமூகமளிக்கும் உரிமையை தன்னிச்சையாகக் கட்டுப்படுத்திய அதிகாரிக்கு எதிராக உரிய ஒழுக்காற்று அல்லது நிர்வாக நடவடிக்கை எடுக்க அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?

இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதையும், ஆடை தொடர்பான தீர்மானங்கள் அதாவது மதம், இனம் அல்லது கலாசார அடையாளத்தின் அடிப்படையில் ஆடை அணிவதற்கு எவ்வித பாகுபாடுமின்றி ஒரேமாதிரியாகவும் நியாயமாகவும் நடைமுறைப் படுத்தப்படுவதையும் உறுதிசெய்வதற்காக அரசாங்கம் மேலும் என்ன நடவடிக்கைகளை தேசிய ரீதியாக மேற்கொள்ளும்? என கேட்கின்றேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »