Our Feeds


Sunday, August 9, 2026

SHAHNI RAMEES

தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமாருக்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு!


தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவையில்

இணைந்துகொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதற்கான உத்தியோகபூர்வ அழைப்பை அனுப்பிவைக்குமாறும், தமது மத்திய குழுவில் ஆராய்ந்து தீர்மானத்தை அறிவிப்பதாகவும் பதிலளித்துள்ளார்.


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகள் தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தி 'தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவை' எனும் பெயரில் இணைந்து செயற்படுவதற்கு இணங்கியிருந்த நிலையில், அக்கட்சிகளின் பிரதிநிதிகள் கடந்த வாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருடன் சந்திப்புக்களை நடாத்தியிருந்தனர்.


இந்தத் தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் கூட்டணியில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்வாங்கப்பட்டிருக்காத நிலையில், கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சந்தித்த வேளையில், தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவையில் இணைந்துகொள்ளுமாறு இராதாகிருஷ்ணன் முன்னிலையில் ரவூப் ஹக்கீம் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக கஜேந்திரகுமார் கேசரியிடம் தெரிவித்தார்.Translation Tools & Resources


'இந்தக் கூட்டணியில் நீங்களும் இணைந்துகொள்ளவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அந்த நிலைப்பாட்டை மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகள் எதிர்க்கவில்லை. ஏனைய கட்சிகளும் இணங்குவதுபோல் உள்ளது. எனவே இதில் நீங்கள் இணைந்துகொள்ளவேண்டும்' என ரவூப் ஹக்கீம் கஜேந்திரகுமாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார், 'தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவையில் இணைந்துகொள்வதில் எமக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. இருப்பினும் அதனூடாக நீங்கள் எந்தெந்த விடயங்களில் கவனம் செலுத்துகிறீர்கள்? என்ன செய்யப்போகிறீர்கள்? என்ற விபரங்கள் அடங்கிய அழைப்பை நீங்கள் எமக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பிவைத்தால், அதனை எமது கட்சியின் மத்திய குழுவில் சமர்ப்பித்து, உரிய தீர்மானத்தை மேற்கொள்ளமுடியும்' என தெரிவித்துள்ளார்.


இது இவ்வாறிருக்க ஏற்கனவே அண்மையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது, 'தனிப்பட்ட மற்றும் கட்சி சார்ந்த பிரச்சினைகளுக்காக, உங்களை தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவையில் சேர்க்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்ற நிலைப்பாட்டையே நானும் தெரியப்படுத்தியிருந்தேன்' என கஜேந்திரகுமாரிடம் மனோகணேசன் கூறியதாகவும் அறியமுடிகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »