"தயவுசெய்து பொறுமையாக இருங்கள். உங்களின் மீட்பு, சிகிச்சை, உணவு மற்றும் தங்குமிடத்துக்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. இதுபோன்ற பேரிடர் காலங்களில் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து நிற்க வேண்டும்” என நேபாள பிரதமர் பலேந்திர ஷா அந்நாட்டு மக்களுக்கான செய்தியை சமூக ஊடகமொன்றில் வெளியிட்டுள்ளார்.
நேபாளத்தில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ள பெரும் வெள்ள அனர்த்த வேளையில், நேற்று (26)மாலை பிரதமர் பலேந்திர ஷா, அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒற்றுமையை கடைபிடிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், மீட்புப் பணிகளுக்காக நேபாள அரசு தன்னிடம் உள்ள அனைத்து வளங்களையும் திரட்டியுள்ளதாகவும் பிரதமர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நிவாரண பணிகளைத் தீவிரப்படுத்துவதற்காக, தேசிய பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம், தேசிய மன்றம் மற்றும் அமைச்சரவை ஆகியவை அவசரகால கூட்டங்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
நேற்று காலை நேபாளத்தில் போட் கோஷி ஆற்றிலிருந்து எழுந்த தரைமட்ட அலைகளால் பாலங்களும் வீடுகளும் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள், ஒரு பேரழிவை தவிர வேறொன்றையும் சித்திரிக்கவில்லை.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களைத் தேடி மீட்பதற்காக நேபாள இராணுவம், ஆயுதக் காவல் படை மற்றும் நேபாள பாதுகாப்புப் படை குழுக்கள் உடனடியாக களமிறக்கப்பட்டதாகவும் ஷா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தி நேபாள இராணுவம் 250க்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்டதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக காத்மாண்டுவுக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் நேற்று மாலை வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டார்.
