(நமது நிருபர்)
பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தமானது நிறைவேற்றப்படக்கூடாத ஒன்றாகுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்ட விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவிக்குகையில்
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நீதித்துறையின் சுயாதீனத்துக்கும் ஜனநாயகத்துக்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்;. நீதித்துறையின் சுயாதீனத்தை பாதிக்கும் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தமும் மக்களின் இறையாண்மையையும் பாதிக்கும் என்பதால், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவது மாத்திரம் போதுமானதல்ல, சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம்;.
எனினும், இந்தத் திருத்தத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையா அல்லது பாராளுமன்ற ஒப்புதலுடன் சர்வஜன வாக்கெடுப்பும் தேவையா என்பது மாத்திரமே பிரதான பிரச்சினையல்ல, இந்தத் திருத்தமே மேற்கொள்ளப்படக் கூடாத ஒன்றாகும்.
அரசியலமைப்புச் சட்ட ரீதியான விடயங்களை நீதிமன்றங்கள் தீர்மானிக்கும் எனவும், அதற்கு அப்பால் ஜனநாயகம், மக்கள் மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் நெறிமுறை ரீதியாக மேற்கொள்ளக்கூடாத சில விடயங்கள் உள்ளன.
மேலும், நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதன் மூலம் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த முடியும் என்ற கூற்றானது முற்றிலும் தவறானது.
பொதுமக்கள் தொடர்பான பெரும்பாலான வழக்குகள் நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்கள் உள்ளிட்ட கீழ்நிலை நீதிமன்றங்களிலேயே விசாரிக்கப்படுகின்றன எனக் குறிப்பிட்ட அவர், உயர் நீதித்துறையின் நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதால் கீழ்நிலை நீதிமன்றங்களில் வழக்குகள் விரைவுபடுத்தப்படாது.
மேல் நீதிமன்றங்கள் அல்லது நீதிவான் நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்குகள் நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதன் மூலம் எவ்வாறு விரைவுபடுத்தப்படும்? இந்த வழக்குகளை விசாரிக்கும் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் ஓய்வு பெறப் போகிறார்களா?.
இதேவேளை, முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கத்தில் ஒரு சிறு குழுவினர் மாத்திரமே கருத்து தெரிவிப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டும் பொய்யானது.
சட்டத்தரணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அமைப்பு சட்டத்தரணிகள் சங்கம்;, பெரும்பான்மையான சட்டத்தரணிகள் இந்தத் திருத்தத்துக்கு எதிராக இருந்தால், சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்த முடியும்.
சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் சங்கத் தலைவரின் கருத்துக்களுக்கு மாத்திரம் கட்டுப்பட்டு செயற்படுவதில்லை, எதிர்ப்பு இருந்தால் அவர்கள் அதனை வெளிப்படையாக தெரிவிப்பார்கள் என்றார்.
