Our Feeds


Friday, August 21, 2026

Zameera

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் பிரதமரைச் சந்தித்தார்


 தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாட்டிலிருந்து புறப்படவிருக்கும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கர்மென் மொரேனோ (Carmen Moreno), ஓகஸ்ட் 20 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

தூதுவரை வரவேற்ற பிரதமர், இலங்கை அண்மையில் முகங்கொடுத்த சவால்களின் போது ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஒத்துழைப்பிற்குத் தனது நன்றியைத் தெரிவித்ததோடு, குறிப்பாக ‘டிட்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலையின் போதும், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு மற்றும் மீட்சிப் பணிகளின் போதும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டினார்.

அதேபோன்று, திறந்த மனதுடனான உரையாடல்களை முன்னெடுப்பதற்கும், இரு தரப்பிற்கும் இடையில் ஆக்கபூர்வமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கும் தூதுவர் கர்மென் மொரேனோ லீ, பதவிக் காலத்தில் வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஒத்துழைப்புகள் குறித்தும் பிரதமர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசாங்கம் எட்டியுள்ள முன்னேற்றங்கள் குறித்துத் தூதுவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பாகப் பரந்தளவிலான கலந்துரையாடல்கள் மற்றும் ஆலோசனை நடைமுறைகளைப் பேணிச் செல்வதன் முக்கியத்துவத்தையும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதற்கு மேலதிகமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுடன் இலங்கை பேணிவரும் உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்திய தூதுவர், பரஸ்பரம் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் பயனுள்ள முறையில் ஈடுபடுவதற்கும் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கும் இலங்கை காட்டிவரும் சாதகத் தன்மையையும் பாராட்டினார்.

இந்நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் பிரதித் தலைவர் காலியா அகிஷேவா (Galia Agisheva), பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிக்கா போகஹவத்த உள்ளிட்ட வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »