1956ஆம் ஆண்டின் பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் சிறுவர் உழைப்பு தொடர்பான குற்றங்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிப்பதை நோக்காக கொண்ட சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது 10,000 ரூபாயாக உள்ள அபராதத் தொகையை 1 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான குறைந்தபட்ச வயது 14 இலிருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஆபத்தான அல்லது அவர்களின் சுகாதாரம், கல்வி மற்றும் நன்னடத்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தொழில்களில் ஈடுபடுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
சிறுவர்களை ஈடுபடுத்தத் தடைசெய்யப்பட்ட தொழில்களின் எண்ணிக்கையும் 51 இலிருந்து 71 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற வீட்டு வேலைகள், தொழிற்சாலைகள், சுரங்கங்கள், ஆழ்கடல் பணிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் உடற்பிடிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விவரங்களை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இலங்கையில் சிறுவர் உழைப்பை முற்றாக ஒழித்து, அனைத்து சிறுவர்களுக்கும் கட்டாயக் கல்வி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவியாக 6,000 ரூபாய் வழங்கப்படுவதுடன், சீருடைகள், பாடநூல்கள், காலணி வவுச்சர்கள் மற்றும் சுகாதாரப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
3 முதல் 5 வயதுக்குட்பட்ட முன்பள்ளி சிறுவர்களுக்கான சத்துணவு கொடுப்பனவும் 60 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
