(இராஜதுரை ஹஷான்)
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து நீதியமைச்சருக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை சரி என்பதை மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது. சிறைச்சாலை கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன தெரிவித்தார்.
மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலைக் கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருந்தால் மஹர சிறைச்சாலை மோதல் தோற்றம் பெற்றிருக்காது.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்கும் 31 பேரின் உயிரிழப்புக்கும் நீதியமைச்சர் பொறுப்புக் கூற வேண்டும் என்று குற்றஞ்சாட்டி அவருக்கு எதிரதாக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தோம். ஆளும் தரப்பினர் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்து நீதியமைச்சரை பாதுகாத்தார்கள்.
மஹர சிறைச்சாலை மோதலுக்கு நீதியமைச்சர் மாத்திரமல்ல அவரை பாதுகாத்த தேசிய மக்கள் சக்தியின் சகல உறுப்பினர்களும் பொறுப்புக்கூற வேண்டும்.நாங்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை சரி என்பதை மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது என்றார்.
