( எம்.எப்.எம்.பஸீர் செ.சுபதர்ஷனி)
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் சீன நிறுவனமொன்றிடமிருந்து 20,000 மெட்ரிக் தொன் தரமற்ற இயற்கை உரத்தை நாட்டுக்கு இறக்குமதி செய்து, அரசாங்கத்துக்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான இழப்பு ஏற்படுத்தப்பட்டுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை (25) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
கொழும்பு நீதிவான் அஸங்க எஸ். போதரமை முன்னிலையில் நேற்றைய தினம் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது வேறொரு வழக்கு தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
இதன்போது மன்றத்தில் முன்னிலையான இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகச் சுட்டிக்காட்டினர். எனவே, குறித்த விசாரணைகளை நிறைவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக திகதியொன்றை வழங்குமாறு ஆணைக்குழுவின் அதிகாரி மன்றில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் மன்றிர் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிவான், மேற்படி வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டதோடு, அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியின் போது சீன நிறுவனத்திடமிருந்து 20,000 மெட்ரிக் தொன் தரமற்ற இயற்கை உரத்தை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியே முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் மேற்படி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
