Our Feeds


Tuesday, August 25, 2026

SHAHNI RAMEES

கொளத்தூர் வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வழக்கு: அடுத்த வாரம் விசாரணை

 


‘‘கொளத்தூர் தொகுதியில் (தமிழக வெற்றிக்கழக

(த.வெ.க.) வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது’’ என அறிவிக்கக்கோரி, தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கு, வரும் திங்கள் கிழமை அல்லது செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அளித்த விண்ணப்பத்தை ஏற்று, கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


அந்த மனுவில், முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி. பேடுகளை சரி பார்க்க உத்தரவிட வேண்டும். த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும். தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.


இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் முன், மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் முறையிட்டார்.


முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு வரும் திங்கள் அல்லது செவ்வாய் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »